3891. | ''மூலமே, வீரமே மூடினாயோடு, போர் ஏலுமே? தேவர்பால் ஏகு'' எனா, ஏவினான் - ''சால நாள் போர் செய்வாய் ஆதியேல், சாரல்; போர் வாலிபால் ஏகு'' எனா - வான் உளோர் வான் உளான். |
மூலமே - (அது கேட்ட சிவபிரான்) பண்டு தொட்டே; வீரமே மூடினாயோடு - வீரச் செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் உன்னோடு; போர் ஏலுமே - போரிடுவது முடியுமா? (முடியாது); தேவர் பால் ஏகு - (ஆதலால்) நீ தேவர்களிடம் போர் செய்யப் போவாயாக; எனா ஏவினான் - என்ற சொல்லி அனுப்பினான்; வான் உளோர் வான் உளான் - (அவனும் சென்று தேவர்களைப் போருக்கு அழைக்க) அந்தத் தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்; சால நாள்- (துந்துபியிடம்) 'நீ நீண்டகாலம்; போர் செய்வாய் ஆதியேல்- போர் செய்ய விரும்புவாயாயின்; சாரல் - இங்கு வராதே; போர் வாலி பால் ஏகு - போர் செய்வதில் வல்ல வாலியிடம் செல்வாய்; எனா - என்று. . . . எனா என்பது அடுத்த பாடலில் 'விட' என்பதோடு முடியும். ஏலுமே - ஏகாரம் எதிர்மறை. சிவபிரான் துந்துபியைத் தேவர்களிடம் அனுப்பப் தேவர் தலைவனாம் இந்திரன் அவனை வாலியிடம் அனுப்பிவைத்தான். 6 |