3893.'இருவரும் திரிவுறும் பொழுதின்
     இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது
     உணர்ந்திலர்கள்
; எவ்உலகினும்,
வெருவரும் தகைவுஇலர், விழுவர்,
     நின்று எழுவரால்;
மருவஅருந்தகையர்,
     தானவர்கள் வானவர்கள்தாம்.

     இருவரும்- வாலி, துந்துபி ஆகிய இருவரும்; திரிவுறும் பொழுதின் -
இடசாரி, வலசாரியாகச் சுழலும் போதில்; இன்னவர்கள் என்று- இவர்கள்
இன்னார் என்று; ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் - எவரும்சிறிதும்
அறிந்திலர்; எவ் உலகினும் - எந்த உலகிலும்; வெருவரும் தகைவு இலர் -
(எவரைக் கண்டும்) அஞ்சும் தன்மையில்லாத இவர்கள்; விழுவர் - கீழே
விழுவார்கள்; நின்று எழுவர் - (மீண்டும்) எழுந்து நிற்பார்கள்; தானவர் -
அசுரர்களும்; வானவர்கள் தாம் - தேவர்களும்; மருவ அருந்தகையர் -
அருகே நெருங்கவும் முடியாத தன்மையினர் ஆயினர்.

     இன்னவர்கள் என்று சிறிதும் உணர்ந்திலர்கள் - இவன் தான் வாலி,
என்றும் இவன் தான் துந்துபி என்றும் அறிய முடியாமையை உணர்த்திற்று.
அவ்விருவரின் உருவத்தின் பெருமையாலும் போரிடும் வேகத்தாலும் இட,
வலமாகச் சுழல்வதாலும் அடையாளம் தெரிந்திலது.  உணர்ந்திலர்கள் - விகுதி
மேல் விகுதி (அர், கள்).  துந்துபியின் இனத்தவர் ஆதலின் 'தானவர்'
முன்னர்க் கூறப்பட்டனர்.                                         8