3894.'தீ எழுந்தது, விசும்புற;
     நெடுந் திசை எலாம்
போய் எழுந்தது, முழக்கு;
     உடன் எழுந்தது, புகை;
தோய நன் புணரியும்,
     தொடர் தடங் கிரிகளும்,
சாய் அழிந்தன; -
     அடித்தலம் எடுத்திடுதலால்.

     அடித்தலம் எடுத்திடுதலால் -  (அவர்கள்) கால்களைத் தூக்கி
வைத்ததால்;தீ விசும்புற எழுந்தது - நெருப்பு வானத்தை அடையுமாறு
மேலெழுந்தது; முழக்கு - (அவர்கள் செய்த) ஆரவாரம்; நெடுந்திசை எலாம்
போய் -
நீண்ட திசைகளெங்கும் சென்று; எழுந்தது - ஒலித்தது; புகை -
(அந்நெருப்பின்) புகையும்; உடன் எழுந்தது - கூடவே பரவிற்று; தோய நல்
புணரியும் -
நீரினை உடைய நல்ல கடலும்; தொடர் தடங்கிரிகளும்-
பெரிய மலைத் தொடர்களும்; சாய் அழிந்தன - அழகு கெட்டன.

     தீ - அடிகள் படுவதால் ஏற்படும் உராய்வில் நிலத்தினின்று எழுந்தது.
கடலும் மலையும் தன் நிலை கெட்டன என்பதால் போரின் கடுமை புலனாகும்.
தோயம் - நீர்.  'எழுந்தது' என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்ததால்
இப்பாடல் சொற்பொருள்பின் வருநிலையணிஅமைந்தது.                9