3897. | 'கவரி இங்கு இது என, கரதலம்கொடு திரித்து இவர்தலும், குருதி பட்டு இசைதொறும் திசைதொறும், துவர் அணிந்தன என, பொசி துதைந்தன - துணைப் பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே. |
இங்கு இது கவரி என - இவ்விடத்தில் வாலி கையில் கொண்டி ருக்கின்ற இது சாமரம் ஆகும் என்று கண்டோர் கூறும்படி; கரதலம் கொடு - (வாலி துந்துபியை) கையினால் (எடுத்து); திரித்து இவர்தலும் - சுழற்றிக் கொண்டு உலாவியபொழுது; குருதி பட்டு இசைதொறும் - (அத்துந்துபியின்) இரத்தம் துளித்துப் படும்போதெல்லாம்; திசை தொறும் - ஒவ்வொரு திசையிலும் உள்ள; துணை பவர் நெடும்பணை - ஒன்றுக் கொன்று துணையாய் உள்ள நெருங்கிய நீண்ட தந்தங்களை உடைய; மதம் பயிலும் - மதம் பொழிகின்ற; வன் கரிகளே - வலிய யானைகள்; துவர் அணிந்தன என - சிவப்பு நிறம் பூசப்பட்டன போல; பொசி துதைந்தன - உதிரக் கசிவு அடர்ந்து படியப் பெற்றன. வாலி துந்துபியைத் தூக்கிக் கையால் சுழற்ற, அவ்வரக்கனது வாயிலிருந்து சிந்திய இரத்தம் திசை யானைகள்மீது தெறித்து விழ, அவை செந்நிறம் பூசப்பட்டன போல விளங்கின என்பதால் எல்லாத் திசைகளிலும் அரக்கன் குருதிபட்டது என்பது புலனாகிறது. 'கவரி இங்கு இது என' என்பதற்கு இஃது ஓர் எருமை என்றெண்ணி' எனவும் பொருள் கொள்ளலாம். கவரி - சாமரையும், எருமையும் என இருபொருள்பட அமைந்த சொல்லாகும். 12 |