3899.'முட்டி, வான் முகடு சென்று
     அளவி, இம் முடை உடற்
கட்டி, மால் வரையை
     வந்து உறுதலும், கருணையான்
இட்ட சாபமும், எனக்கு
     உதவும்' என்று இயல்பினின்,
பட்டவா முழுவதும்,
     பரிவினால் உரைசெய்தான்.

     இம்முடை உடற்கட்டி- இந்த முடை நாற்றமுடைய இவ்வுடற் பிண்டம்;
வான் முகடு முட்டிச் சென்று -
ஆகாயத்தின் உச்சியைத் தாக்கிச் சென்று;
அளவி -
அங்குப் படிந்து; மால் வரையை - பெரிய இந்த மலையை; வந்து
உறுதலும் -
வந்து அடைந்ததால்; கருணையான் - கருணை மிக்கவரான
மதங்க முனிவர்; இட்ட சாபமும் - (வெகுண்டு வாலிக்குக்) கொடுத்த சாபமும்;
எனக்கு உதவும் என்று -
எனக்கு இப்பொழுது உதவியாக இருக்கின்றது'
என்று; இயல்பினின் - இவ்விதமாக; பட்டவா முழுவதும் - நடந்த வரலாறு
முழுமையும்; பரிவினால் உரை செய்தான் - அன்பொடு சொன்னான்
(சுக்கிரீவன்).

     மால்வரை - சுக்கிரீவன் தங்கியிருக்கும் ருசியமுகமலை.  வாலி எறிந்த
துந்துபி உடல் ருசியமுகமலையில் மதங்க முனிவர் தவஞ்செய்து கொண்டிருந்த
ஆசிரமத்தில் விழுந்து அதன் தூய்மையைக் கெடச் செய்ததால் முனிவர்
வாலிமேல் சினங்கொண்டு சாபமிட்டார்.  வாலி இம்மலைப்பகுதிக்கு வரின்
தலை வெடித்து இறக்கக்கடவன் என்பதும், அவனைச் சேர்ந்த நண்பர்கள்
வரின் கல்வடிவமாகக் கடவர் என்பதும் அவரிட்ட சாபமாகும்.  மதங்க
முனிவர் வாலிக்கு இட்ட சாப வரலாறு, முன் இராமனுக்கு அனுமன் உரைத்த
(3851) பாடலாலும் அறியக் கிடக்கும். இங்ஙனம் அவ்வெலும்பின்
வரலாற்றையும், தான் அம்மலையில் வாழும் காரணத்தையும் சுக்கிரீவன்
இராமனுக்கு உரைத்தான்.                                       14