இராமனிடம், சுக்கிரீவன் சில செய்திகளைத் தெரிவித்தல் கலிவிருத்தம் 3901. | ஆயிடை, அரிக்குலம் அசனி அஞ்சிட வாய் திறந்து ஆர்த்தது வள்ளல், ஓங்கிய தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய், 'நாயக! உணர்த்துவது உண்டு நான்' எனா. |
ஆயிடை- அப்பொழுது; அரிக்குலம் - குரங்குக் கூட்டம்; அசனி அஞ்சிட - இடியும் அச்சம் அடையுமாறு; வாய் திறந்து ஆர்த்தது - வாய்விட்டு ஆரவாரித்தது; வள்ளல் - இராமன்; ஓங்கிய தூய நல் சோலையில் - உயர்ந்த தூய்மையான அழகிய சோலையில்; இருந்த சூழல்வாய் - வந்து தங்கியிருந்த சமயத்தில்; நாயக - (சுக்கிரீவன் இராமனை நோக்கித்) 'தலைவனே!' நான் உணர்த்துவது - நான் சொல்லவேண்டுவது; உண்டு எனா - (ஒன்று) உளது என்று - 'எனா' என்னும் வினையெச்சம் இப்படலத்தின் நான்காம் பாடலில் வரும். 'காட்டினன்' என்னும் வினைமுற்றைக் கொண்டு முடியும். மராமரங்களைத் துளைத்தும், துந்துபியை உந்தியும் தம் வலிமையைக் காட்டிச்சுக்கிரீவனுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்தமையால் மகிழ்ச்சி மிகுதியால்அரிக்குலம் வாய்திறந்து ஆர்த்தது. 1 |