3902. | 'இவ் வழி, யாம் இயைந்து இருந்தது ஓர் இடை, வெவ் வழி இராவணன் கொணர, மேலைநாள், செவ் வழி நோக்கி, நின் தேவியே கொலாம், கவ்வையின் அரற்றினள், கழிந்த சேண் உளாள்? |
மேலை நாள் - முன்னொரு நாளில்; இவ்வழி யாம் - இந்த இடத்தில் நாங்கள்; இயைந்து இருந்தது ஓர்இடை - கூடியிருந்த ஒரு சமயத்தில்; வெவ்வழி இராவணன் - கொடிய வழியில் செல்பவனாகிய இராவணன்; கொணர - எடுத்து வரும் போது; நின் தேவியே கொலாம் - (அவன் கையகப்பட்டுச் செல்கின்றவள்) நின் தேவியான சீதை தானோ? கழிந்த சேண் உளாள் - நெடுந்தூரத்தில் வானத்தில் உள்ளவனாய்; செவ்வழி நோக்கி - (இக்காடு, மலைகளில் உள்ள) நேரான வழியைப் பார்த்து; கவ்வையின் அரற்றினன் - துன்பத்தால் கதறி அழுதாள். நெடுந்தூரத்தில் வானத்தில் செல்பவளாக இருந்ததால் திருமேனி அடையாளம் கண்டு உறுதியாகக் கூற முடியாமையின் 'நின் தேவியை கொலாம்' என்றான். கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படவில்லையெனினும் அழுகை ஒலியால் பெண் என அறி முடிந்தது. இப்போது அந்தப் பெண் சீதையாக இருக்கலாமோ என்று ஊகிக்கிறேன்'என்றான். 2 |