3903.'' உழையரின் உணர்த்துவது உளது''
     என்று உன்னியோ?
குழை பொரு கண்ணினாள்
     குறித்தது ஓர்ந்திலம்;
மழை பொரு கண்
     இணை வாரியோடு தன்
இழை பொதிந்து இட்டனள்;
     யாங்கள் ஏற்றனம்.

     உழையரின் - தூதர்களைப் போல; உணர்த்துவது - (தன்னிலையை
நினக்குத்) தெரிவிக்கக் கூடியது; உளது என்று - உண்டு என்று; உன்னியோ-
நினைந்தோ? குழை பொரு கண்ணினாள் - காதணியோடு போரிடும்
நீண்ட கண்ணினை உடையவளான அவள்; குறித்தது ஓர்ந்திலம் -
கருதியதனை அறிந்தோம் இல்லை; தன் இழை பொதிந்து - தன்
ஆபரணங்களை முடிந்து; மழை பொரு கண் இணை - மழை போன்ற இரு
கண்களினின்று; வாரியொடு - பெருகிய கண்ணீரோடு; இட்டனள் - கீழே
போட்டனள்; யாங்கள் ஏற்றனம் - (அம்முடிப்பை அது தரையில் விழுவதற்கு
முன்) நாங்கள் கைகளில் ஏந்திக்கொண்டோம்.

     காட்டிற்கு வருகையில் இராமன் கூறியாங்குத் தன் அணிகலன்களில்
பெரும்பாலானவற்றை அந்தணர்களுக்குச் சீதை தானம் செய்து விட்டாள்.
பிறகு அத்திரி முனிவரின் ஆசிரமத்தில் அவர் மனைவியான அனசூயையால்
அளிக்கப்பட்ட அணிகலன்களை அணிந்து கொண்டிருந்தனள் என்பது இங்கு
அறியத்தக்கது.

     உழையரின் - தூதர்கள் போல; அணிகலன்கள் தன்னிலையினைத்
தூதர்கள் போல நினக்குத் தெரிவிப்பது உண்டு என்று நினைந்தோ என்ற
பொருளை முதலடி உணர்த்தும்.  கருநிறத்தாலும் நீர்பொழிதலாலும் மழை
கண்ணிற்கு உவமை ஆயிற்று.  கண்ணீரின் மிகுதி தோன்ற 'வாரி' என்றான்.
குழை பொரு கண் - கண்கள் காதளவு நீண்டிருத்தல் உத்தம இலக்கணம்
உணர்த்தியதாகும்.  சீதை தன் அணிகலன்களை நிலத்திலிட்ட செய்தி
'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை, வலித்தகை அரக்கன் வவ்விய
ஞான்றை, நிலம் சேர் மதரணி' (378) என்று புறநானூற்றிலும கூறப்பட்டுள்ளது.
                                                   3