சீதையின் அணிகலன்களைக் கண்ட இராமன் நிலை

3904.'வைத்தனம் இவ் வழி; -
     வள்ளல்! - நின் வயின்
உய்த்தனம் தந்த போது
     உணர்தியால் எனா
கைத்தலத்து அன்னவை
     கொணர்ந்து காட்டினான்; -
நெய்த்தலைப் பால்
     கலந்தனைய நேயத்தான்.

     நெய்த்தலை - தேனில்; பால் கலந்தனைய - பால் கலந்தாற் போன்ற;
நேயத்தான் -
இனிய நட்பினை உடைய சுக்கிரீவன்; வள்ளல் - (இராமனை
நோக்கி) 'வள்ளலே! இவ்வழி வைத்தனம் - அந்த அணிகல முடிப்பை
இங்கே பாதுகாப்பாக வைத்துள்ளோம்; நின்வயின் - நின்னிடத்து; உய்த்தனம்
தந்த போது -
கொண்டு வந்து தரும் போது; உணர்தி - உண்மையை
அறிவாய்'; எனா - என்று கூறி; கைத்தலத்து - கையில்; அன்னவை
கொணர்ந்து -
அந்த அணிகலன்கள்களைக் கொண்டு வந்து; காட்டினான்-- ;

     நெய் - தேன்; நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயம் என்றது
வெவ்வேறு சுவையுடைய தேனும் பாலும் கலக்கையில் புதிய இனிய சுவை
பயப்பது போல் வேறுவேறு இயல்பினரான இராம சுக்கிரீவர் நட்பால் புதிய
உறவு ஏற்பட்டு இனிமை பயக்கும் என்றவாறு.  நெய்த்தலை - தலை ஏழனுருபு;
கலந்ததனைய என்பது கலந்தனைய எனவிகாரமாயிற்று.                 4