3907.விட்டபேர் உணர்வினை
    விளித்த என்கெனோ?
அட்டன உயிரை அவ்
     அணிகள் என்கெனோ?
கொட்டின சாந்து எனக்
    குளிர்ந்த என்கெனோ?
சுடடன என்கெனோ?
    யாது சொல்லுகேன்?

     அவ் அணிகள்- அந்த அணிகலன்கள்; விட்ட பேர் உணர்வினை-
(இராமனை) விட்டு நீங்கியிருந்த சிறந்த அறிவினை; விளித்த என்கெனோ?-
திரும்பி அழைத்தன என்று சொல்வேனோ? உயிரை அட்டன என்கெனோ-
(அவனது) உயிரைக் கொன்றன என்று சொல்வேனோ? கொட்டின சாந்து
என -
(அவன் மீது) மிகுதியாகக் கொட்டப் பெற்ற சந்தனம் போல; குளிர்ந்த
என்கெனோ -
குளிச்சி செய்தன என்று சொல்வேனோ?சுட்டன
என்கெனோ -
பிரிவுத் துயரை அதிகமாக்கிச் சுட்டன என்பேனோ?யாது
சொல்லுகேன் -
என்னவென்று சொல்லுவேன்?

     அணிகலன்களைக் கண்டதும் இராமன் அடைந்த மாறுபட்ட
உணர்ச்சிகளை இப்பாடலில் காணலாம்.  சீதையின் பிரிவால் இராமனின்
பேரறிவு அவனை விட்டு நீங்கியிருந்தது.  அவளது அணிகலன்களைக் கண்ட
மாத்திரத்தில் அப்பேரறிவு மீண்டு வரலாயிற்று.  எனினும் அவ்வணிகலன்கள்
அவளை நினைவுபடுத்தித் துன்புறுத்தியதால் அவனை வருத்தி உயிரைக்
கொன்றனவாயின.  மீண்டும் அவை அப்பிரிவுத் துயரைத் தணித்தனவாகவும்
விளங்கின.  துயரை அதிகப் படுத்திச் சுடுவனவாயும் விளங்கின.  இங்ஙனம்
இன்னபடி என்று ஒன்றைத் துணிந்து கூறமுடியாத காரணத்தால் 'யாது
சொல்லுகேன்' என்றார்.  பிரிந்த காலத்தில் பிரிந்த பொருளொடு
தொடர்புடையனவற்றைக் காண்கையில் ஒரு கால் தளர்தலும், ஒரு கால் தளர்வு
அகன்றிருத்தலும் இயல்பாகும்.

     சீதையின் அணிகலன்களைக் கண்ட இராமன் அடைந்த
மெய்ப்பாடுகளைக் கணையாழி பெற்ற சீதை அடைந்த மகிழ்ச்சிக்கான
மெய்ப்பாடுகளோடு ஒப்பிட்டுக் காணலாம்.  'மறந்தவர் அறிந்து உணர்வு
வந்தனர் கொல் என்கோ . . . . திறம் தெரிவது என்னை கொல், இந்நல் நுதலி
செய்கை?'' (5291) என்ற அடிகளைக் காண்க.  அட்டன, குளிர்ந்த, சுட்டன -
பலவின்பால் வினைமுற்று; இப்பாடலில் வந்துள்ள என்கெனோ தன்மை
ஒருமை வினைமுற்று நான்கிலும், சொல்கேன் என்ற தன்மை ஒருமை
வினைமுற்றிலும் ககர ஒற்று எதிர்கால இடைநிலை.                     7