3909. | ஈர்த்தன, செங்கண் நீர் வெள்ளம், யாவையும்; போர்த்தன, மயிர்ப் புறம் புளகம்; பொங்கு தோள், வேர்த்தன என்கெனோ? வெதும்பினான் என்கோ? தீர்த்தனை, அவ் வழி, யாது செப்புகேன்? |
செங்கண் நீர் வெள்ளம் - (இராமனின்) சிவந்த இரண்டு கண்களினின்றும் பெருகிய கண்ணீர் வெள்ளம்; யாவையும் ஈர்த்தன - அங்குள்ள எல்லாப் பொருள்களையும் இழுத்துச் சென்றன; மயிர்ப் புளகம் - மயிர்ச் சிலிர்ப்புகள்; புறம் போர்த்தன - மேனி முழுமையும் மூடின; பொங்கு தோள் - பூரிக்கின்ற அவன் தோள்கள்; வேர்த்தன என்கெனோ - வியர்த்தன என்று சொல்வேனோ? வெதும்பினான் என்கோ - பிரிவுத் துயரால் வெப்பமுற்று வாடினான் என்று சொல்வேனோ? அவ்வழி - அப்பொழுது; தீர்த்தனை யாது செப்புகேன் - தூயவனான இராமன் நிலை பற்றி என்ன சொல்வேன்? மயிர்ப்புளகம் புறம் போர்த்தலும், தோள் பொங்குதலும் மகிழ்ச்சியாலும், வியர்த்தலும் வெதும்பலும் துன்பத்தாலும், கண்ணீர் வெள்ளம் பெருகுதல் இரண்டினாலும் விளையக்கூடிய மெய்ப்பாடுகளாம். அவையனைத்தையும் இராமன் ஒருங்கே பெற்றதால் அவன் மகிழ்ந்தானா? அல்லது துன்புற்றானா என ஒன்றைத் துணிந்து கூற இயலாமல் போனதால் 'யாது செப்புகேன்' என்றார். தீர்த்தன் - தூயவன். இராமனைத் 'தீர்த்தன்' என்று அனுமனும் குறித்தல் (5415) காண்க. இப்பாடலில் முதலடி உயர்வு நவிற்சி அணி பொருந்தியது. இறுதி இரண்டு அடிகளில் ஐய அணிஅமைந்துள்ளது. 9 |