3914.'ஈண்டு நீ இருந்தருள்;
     ஏதொடு ஏழ் எனாப்
பூண்ட பேர் உலகங்கள்
     வலியின் புக்கு, இடை
தேண்டி, அவ் அரக்கனைத்
     திருகி, தேவியைக்
காண்டி; யான் இவ்
     வழிக் கொணரும் கைப்பணி.

     ஈண்டு நீ இருந்தருள் - இங்கேயே நீ இருந்தருள்வாய்!ஏழொடு ஏழ்
எனாப் பூண்ட -
பதினான்கு என்னும் தொகை கொண்ட; பேர்
உலகங்கள் -
பெரிய உலகங்களிலெல்லாம்; வலியின் புக்கு - வலிமையினால்
புகுந்து; இடை தேண்டி - அவ்விடங்களில் எல்லாம் பிராட்டியைத் தேடி;
அவ் அரக்கனைத் திருகி -
அந்த அரக்கனான இராவணனைத் தலை
முறித்து; தேவியை இவ்வழிக் கொணரும் - தேவியாகிய பிராட்டியை
இவ்விடம் யான் கொண்டு வந்து சேர்க்கும்; கைப்பணி - என் குற்றேவல்
தொழிலை; காண்டி - காண்பாயாக.

     பெருவலி படைத்த சிறந்த வீரனான இராமன் இச்சிறிய செயலைச்
செய்வதற்குச் செல்ல வேண்டுவதில்லை அவன் இவ்விடமே இருக்கலாம்
என்பதால், 'ஈண்டு நீ இருந்தருள்' என்றான்.  இராவணன் எங்கிருப்பினும்
அவனைக் கண்டு பிடித்து, அவனைக் கொன்று சீதையை மீட்டுக் கொணர்தல்
தன்னால் இயலும் என்பதாலும் 'ஈண்டு நீ இருந்தருள் என்றான்.  இந்தச்
செயல் தன் ஆற்றலுக்கு எளிதே என்பதால் 'கைப்பணி' என்றான். 
கைப்பணி- சிறுதொண்டு, குற்றேவல், இராமனுக்குச் செய்யும் கைங்கர்யம்
எனும்பொருளில் வருவது.  'கைத்தொழில் செய்வேன் என்று கழல் இணை
வணங்குங் காலை' (4142) என்ற அனுமன் கூற்று ஈண்டு நோக்கத்தக்கது.
கை- சிறுமையை உணர்த்தும் சொல்.  இடை - இடம், தேண்டி - தேடி
என்பதன்விரித்தல் விகாரம்; காண்டி -ஏவலொருமை.                14