3915. | 'ஏவல் செய் துணைவரேம், யாங்கள் ; ஈங்கு, இவன், தா அரும் பெரு வலித் தம்பி; நம்பி! நின் சேவகம் இதுஎனின், சிறுக நோக்கல் ஏன்? மூவகை உலகும் நின் மொழியின் முந்துமோ? |
நம்பி - ஆடவரில் சிறந்தவனே! யாங்கள் - நாங்கள்; ஏவல்செய் துணைவரேம் - நின் ஏவல் வழியில் பணி செய்யும் தோழர்களாக உள்ளோம்; ஈங்கு இவன் - இங்கே உள்ள இலக்குவனோ; தா அரும் பெரு வலித்தம்பி- அழித்தற்கரிய பெரிய வலிமை படைத்த தம்பியாக உள்ளான்; நின் சேவகம்- உனது வீரம்; இது எனில் - இத்தன்மைத்து என்றால்; சிறுக நோக்கல் என்- (உன்னை நீ) குறைபடக் கருதுவது ஏனோ?மூவகை உலகும் - மூன்றுஉலகங்களும்; நின் மொழியின் முந்துமோ - நின் கட்டளையைக்கடக்குமோ? (கடவாது). ஏவிய பணியைச் செய்ய வானரர்கள் இருக்க, தம்பி அளத்தற்கரிய வலிமையுடையவனாய் அருகே இருக்க, உலகமேழும் தன் ஒரு கணைக்கு ஆற்றா வலிமை தன்னிடம் இருக்க, இராமன் வலியற்றான் போலவும், துணையில்லாதவன் போலவும் சோர்வடைதல் தகாது என்று சுக்கிரீவன் உரைத்தான் என்க. சேவகம் - வீரம். ஏழுமராமரங்களையும் ஓரம்பால் துளைத்த செயல் நினைந்து 'இது' எனப் பேசினான். வீரன் என்ற பொருளில் இராமனைச் 'சேவகன்' என்றே பல இடங்களில் கம்பர் கூறுவது காண்க. 'தீராய் ஒரு நாள் வலி சேவகனே' என்ற சீதையின் கூற்றும் (5232) 'சேவகன்தேவி' என்ற அனுமன் உரையும் (5861) காண்க. துணைவரேம் - தன்மைப் பன்மை விகுதி பெற்று வந்தது; சிறுக நோக்கல்' - எளியவனாகப் பாவித்தல், மூவகை உலகு - விண், மண், பாதலம் என மூவகைப்பட்டன. உலகு - இடவாகுபெயர். 15 |