3917. | 'முளரிமேல் வைகுவான், முருகன் தந்த அத் தளரியல் பாகத்தான், தடக் கை ஆழியான், அளவிஒன்று ஆவரே அன்றி, - ஐயம் இல் கிளவியாய்! - தனித் தனி கிடைப்பரோ துணை? |
ஐயம் இல் கிளவியோய் - சந்தேகத்திற்கு இடமில்லாத சொற்களைப் பேசும் ஐயனே! முளரி மேல் வைகுவான் - தாமரை மலர்மீது வாழும் நான்முகன்; முருகன் தந்த - முருகக் கடவுளை அளித்த ; அத்தளிரியல் பாகத்தான் - அழகிய தளிர் போன்ற இயல்புடைய பார்வதியை ஒரு பக்கத்திலே உடையவனான சிவபிரான்; தடக்கை ஆழியான் - தன் பெரிய கையில் சக்கரத்தை உடைய திருமால்; ஒன்று அளவி - (ஆகிய மூவரும்) ஒன்றாக இணைந்து; ஆவரே அன்றி - நினக்கு ஒப்பாவரே யன்றி; தனித்தனி- ஒவ்வொருவராகத் தனித்து; துணைக் கிடப்பரோ - ஒப்பாக அமைவார்களோ? (அமைய மாட்டார்கள்). இப்பாடலில் இராமபிரான் மும்மூர்த்திகளுள் ஒருமித்த பரம்பொருள் என்பது பெறப்படுகிறது. 'முப்பரம் பொருளுக்கு முதல்வன்' (313). 'முப்பரம் பொருளிற்குள் முதலை (1227); என்ற அடிகளாலும் விராதன், கவந்தன், வாலி முதலானோர் வாழ்த்துக்களாலும் இக்கருத்து வலியுறுதல் காணலாம். கடவுள் மூவர் தனித்தனியே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில் புரிய இராமன் மூன்று தொழில்களையும் ஒருங்கே இயற்றும் ஆற்றலுடையவன் எனச் சுக்கிரீவன் இராமனைப் பாராட்டினான் என்க. 'ஐயமில் கிளவியாய்' எனுந் தொடர் இராமனது சொல்லாற்றலைப் புலப்படுத்தும். இராமனைப் பொறுத்தவரை ஒரு சொல், ஒரு இல், ஒரு வில் உடையவன் என்ற கூற்று பிற இலக்கியங்களில் காணக்கிடக்கின்றது. முளரி - தாமரை, முதலாகுபெயராய்ப் பூவை உணர்த்திற்று. முட்களை அடியில் உடையது என்னும் பொருளில் தாமரையைக் குறிப்பதால் இது காரண இடுகுறிப்பெயருமாம். அத்தளிரியல் - அ உலகறிசுட்டு. தளிரியல் - உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை; கிடைப்பரோ - ஓகாரம்எதிர்மறை. 17 |