இராமன் சிறிது தெளிந்து, பேசுதல்

3919.எரி கதிர்க் காதலன்
     இனைய கூறலும்,
அருவி அம் கண்
     திறந்து, அன்பின் நோக்கினான்;
திரு உறை மார்பனும்,
     தெளிவு தோன்றிட,
ஒருவகை உணர்வு வந்து,
     உரைப்பது ஆயினான்:

     எரிகதிர்க் காதலன் - சுடுகின்ற கதிர்களை உடைய சூரியன் மக னான
சுக்கிரீவன்; இனைய கூறலும் - இவ்வாறான வார்த்தைகளைச் சொன்ன
அளவில்; திரு உறை மார்பனும் - இலக்குமியாம் திருமகள் தங்கிய
மார்பினை உடைய இராமனும்; தெளிவு தோன்றிட - தெளிவு பிறக்க; ஒரு
வகை உணர்வு வந்து -
ஒருவாறு தன் நினைவு வரப் பெற்று; அருவி அம்
கண்திறந்து -
அருவிபோல் கண்ணீர் பெருக்கும் தன் அழகிய கண்களைத்
திறந்து; அன்பின் நோக்கினான் - அன்போடு (சுக்கிரீவனைப்) பார்த்து;
உரைப்பது ஆயினான் -
பின்வருமாறு பேசலுற்றான்.

     சோர்வடைந்து கண்களை மூடியவண்ணம் இருந்த இராமன் சுக்கிரீவன்
கூறியவற்றைக் கேட்டதும் கண்களைத் திறந்து, அன்பொடு பார்த்துப்
பேசலானான் என்பதாம்.  திரு உறை மார்பன் - திருமகள் தங்கிய மார்பினை
உடைய திருமாலின் அவதாரமான இராமபிராமன். 'அகல கில்லேன் இறையும்
என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்பது திருவாய்மொழி (6-10-10).
எரிகதிர் - சூரியன் - வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
காதலன் -மகன்.                                               19