3920. | 'விலங்கு எழில்தோளினாய், வினையினேனும், இவ் இலங்கு வில் கரத்திலும், இருக்கவே, அவள் கலன் கழித்தனள்; இது கற்பு மேவிய பொலன் குழைத் தெரிவையார் புரிந்துளோர்கள் யார்? |
விலங்கு எழில் தோளினாய் - மலை போன்ற அழகிய தோள்களை உடையவனே! வினையினேனும் - தீவினை உடையேனாகிய யானும்; இவ் இலங்கு வில்லும் - விளங்குகின்ற இந்த வில்; கரத்தில் இருக்கவே - என் கரங்களில் இருக்கும் போதே; அவள் - அந்த சீதை; கலன் கழித்தனள் - தன் அணிகலன்களை நீக்கினாள்; கற்பு மேவிய - கற்பு நெறியை மேற்கொண்ட; பொலன் குழைத் தெரிவையர் - பொன்னாலான குழையணிந்த மகளிருள்; இது புரிந்துளோர்கள் யார் - இத்தகைய செயல் செய்தவர்கள் யார்? (எவருமில்லை). கணவன் உயிருடன் இருக்கையில் கற்புடைய மகளிர் தம் அணிகலன்களைக் களைதல் இல்லை. அங்ஙனமிருக்கவும் சீதை கலன் களைந்த நிலைக்கு இராமன் பெரிதும் வருந்தினான். தன்னைத் தானே வெறுத்துக்கொண்ட நிலையில் 'வினையினேன்' என்றனன். இராமன், கடவுள்நிலையில் வினைத்தொடர்பற்றவனாயினும், இம்மனித உருவில் சீதையைப் பிரிந்த துயரால், மானிட உணர்விற்கு ஏற்ப 'வினையினேன்' என உரைத்தனன். தன் கையில் வில் பெற்றும், சீதை துயர் களைய முடியாது போனமையின் 'இலங்கு வில் கரத்தில் இருக்க' என்று தன்னை இழித்துக் கூறிக் கொண்டான். மகளிர் கலன் கழித்தல் மங்கலமற்ற செயல் எனினும், பிராட்டி கலன்களை நீக்கியது அவளுக்கு மங்கலமாக முடிந்ததை அனுமன் ''இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழித்து நீத்த மற்றை நல் அணிகள் காண், உன் மங்கலம் காத்த மன்னோ!'' (5262) என்ற சிறப்பமையக் கூறியது ஈண்டுக் கருதத்தக்கது. விலங்கு - மலை, அவள் என்றதுசீதையை. 20 |