3922.'ஆறுடன் செல்பவர், அம்
    சொல் மாதரை
வேறு உளார் வலி செயின்,
    விலக்கி, வெஞ் சமத்து
ஊறுற, தம் உயிர்
    உகுப்பர்; என்னையே
தேறினள் துயரம்,
    நான் தீர்க்ககிற்றிலேன்.

     ஆறு உடன் செல்பவர் - வழியில் உடன் செல்பவர்களான; அம்
சொல் மாதரை -
அழகிய மொழியினை உடைய மகளிரை; வேறு உளார்
வலி செயின் -
வேறு எவரேனும் இடையில் வந்து துன்பம்
செய்வார்களாயின்; விலக்கி - அதனை விலக்கி; வெம்சமத்து ஊறு உற -
(அவ்வாறு விலக்குவதால்) ஏற்படும் கொடிய போரில் அவர்களுக்கு ஆபத்து
உண்டாக; தம் உயிர் உருப்பர் - தமது உயிரையும் அளிப்பர்; என்னையே
தேறினள் துயரம் -
(உலக இயல்பு அங்ஙனம் இருக்க) என்னையே
நம்பியவளான சீதையின் துயரத்தை; நான் தீர்க்ககிற்றிலேன் - நான் தீர்க்கும்
ஆற்றல் இல்லாதவனாய் உள்ளேன்.

     தொடர்பில்லாதவராயினும் மகளிர்க்குப் பிறரால் துன்பம் வரின் தம்
உயிரையும் பொருட்படுத்தாது உதவுதல் நல்லார் கடமையாகக் கொண்டிருக்க,
தொடர்புடையவளாய் இராமனையே நம்பி வந்திருக்கும் சீதையின் துயர்
களையும் ஆற்றல் இல்லாது நிற்கும் நிலை குறித்து அவன் இவ்வாறு வருந்திப்
பேசினான்.  பிறரால் துன்புறுத்தப்படும் மகளிரைக் காக்கும் ஆடவரின்
சிறப்பிற்கு ஓர் உதாரணமாகச் 'சடாயு' விளங்கினான்.  'தன்னுயிர் புகழ்க்கு
விற்ற சடாயு' (5305) என அனுமனாலும் 'சரண் எனக்கு யார்கொல்?' என்று
சானகி அழுது சாம்ப, 'அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!' என்று
அருளின் எய்தி, முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய்யமர் முடித்து,
தெய்வ மரணம் என்தாதை பெற்றது என் வயின் வழக்கு அன்று ஆமோ?
(6477) என இராமனாலும் சடாயு சிறப்பிக்கப்படுவதைக் காண்கிறோம். வழியில்
மகளிர்க்கு வரும் இடுக்கண் நீக்காமை பழிக்குரிய செயலாவதை 'ஆறு
தன்னுடன் வரும் அம் சொல் மாதரை, ஊறுகொண்டு அலைக்க, தன் உயிர்
கொண்டு ஓடினோன்' என்ற பரதன் கூற்று உணர்த்தும் (2207).

     ஊறு - துன்பம், ஆபத்து; முதனிலை திரிந்த தொழிற் பெயர்.  தீர்க்க
கிற்றிலேன் - இதில் 'கில்' என்பது ஆற்றலை உணர்த்தும் இடைநிலை.    22