3923. | 'கருங் கடல் தொட்டனர்; கங்கை தந்தனர்; பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர்; பெருந் தகை என் குலத்து அரசர்; பின், ஒரு திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன். |
பெருந்தகை - பெருமைக்குரிய குணங்களை உடைய; என் குலத்து அரசர் - என் குலத்து முன்னோராய அரசர்கள்; கருங்கடல் தொட்டனர் - பெரிய கடலைத் தோண்டினர்; கங்கை தந்தனர் - வானிலிருந்து நிலவுலகிற்குக் கங்கையைக் கொண்டு வந்து தந்தனர்; பொரும் புலி மானொடு - போர் செய்யும் புலியோடு மானையும்; புனலும் ஊட்டினர் - ஒரு துறையில் பகைமையின்றி நீர் உண்ணச் செய்தனர்; பின் நான் - அத்தகைய அரசர்களுக்குப் பின்னர் வந்த நானோ; ஒரு திருந்திழை துயரம் - திருந்திய நகைகளை அணிந்த ஒரு பெண்ணின் துயரத்தை; தீர்க்க கிற்றிலேன் - நீக்கும் திறமையற்றவனானேன். தன் குலத்து முன்னோர்கள் கடலைத் தோண்டுதலும், கங்கையைக் கொணர்தலும், புலியும் மானும் ஒரு நீர்த்துறையில் நீர் உண்ணச் செய்தலும் ஆகிய அரிய செயல்களைச் செய்திருக்க, அத்தகு மரபில் வந்த தானோ தன் மனைவியின் துயர் கூடப் போக்கமுடியாது இருப்பதை எண்ணி இராமன் இரங்கிப் பேசினன் என்க. கடல் தொட்டவர் சகரர். புலி மானொடு ஊட்டியவன் - சூரிய குல அரசன் மாந்தாதா. குலமுன்னோர் பெருமை இந்நூலிலே குலமுறை கிளத்து படலத்தும் பேசப்பட்டது. ''இவர் குலத்தோர் உவரி நீர்க்கடல் தோட்டார் எனின், வேறு கட்டுரையும் வேண்டுமோ?''; 'பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை, வான் நின்று கொணர்ந்தானும், இவர் குலத்து ஓர் மன்னவன் காண்!''; ''புலிப்போத்தும் புல் வாயும், ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன்'' (644, 645, 641) என்ற அடிகளைக் காண்க. இராமன் முன்னோர்களைச் சோழர்குல முன்னோர்களாகக் கருதி, மேற்கண்ட அருஞ்செயல்ளைச் சோழ முன்னோர் செயல்களாகப் பாராட்டிப் பேசுவதைக் கலிங்கத்துப் பரணி, மூவருலா, ஆகிய நூல்களிலும், சோழர் காலக் கல்வெட்டுக்களிலும், சேப்பேடுகளிலும் காணலாம். திருந்திழை - வினைத்தொகைப் புறத்துப் பிறந்தஅன்மொழித்தொகை. 23 |