3924.'இந்திரற்கு உரியதுஓர்
    இடுக்கண் தீர்த்து, இகல்
அந்தகற்கு அரிய போர்
    அவுணன் - தேய்த்தனன்,
எந்தை; மற்று, அவனின் வந்து
    உதித்த யான், உளேன்,
வெந் துயர்க் கொடும்
    பழி வில்லின் தாங்கினேன்.

     என் தந்தை- எனது தந்தை (தசரத சக்கரவர்த்தி); இந்திரற்கு உரியது
ஓர் இடுக்கண் -
இந்திரனுக்கு நேரிட்டதொரு பெரிய துன்பத்தை; தீர்த்து -
நீக்கி; அந்தகற்கு இகல் அரிய - யமனும் எதிர்த்து நிற்க அரியவனான;
போர் அவுணன் -
போரில் வல்ல சம்பரன் எனும் அரக்கனை;
தேய்த்தனன்- அழித்திட்டான்; அவனின் வந்து உதித்த யான் -
அவனிடத்து வந்துதோன்றிய யானோ; வெந் துயர்க் கொடும் பழி-
பெரிய துன்பத்தைத் தரும்கொடும் பழியை; வில்லின் - வில்லுடனே;
தாங்கினேன் உளேன் - சுமந்தவனாய் இருக்கின்றேன்.

     தசரதன் வெல்லுதற்கரிய சம்பரன் எனும் அரக்கனைக் கொன்று
இந்திரன் துயர் போக்க, அவன் மகனான தன்னால் அரக்கனைக் கொன்று
சீதை துயர் துடைக்க இயலவில்லையே என இராமன் வருந்தினான்.
பயன்படாது சுமையான வில்லுடன் கொடும்பழியும் சுமையாயிற்று என்றவாறு.
இடுக்கண் தீர்த்து அவுணன் தேய்த்தான் என்பது அவுணனைத் தேய்த்து
இடுக்கண் தீர்த்தான் என்ற பொருளில் அமையும். 'கொடும்பழி வில்லின்
தாங்கினேன்' என்றது 'நாண் நெடுஞ்சிலை சுமந்து உழல்வென்' என முன்னர்
வந்தமை (3921) போன்றது. தசரதன் சம்பரனை வென்ற இந்திரன் துயர் நீக்கிய
செய்தியைக் ''குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடும்
தொலைத்து நீ கொண்டு அன்று அளித்த அரசுஅன்றோ புரந்தரன் இன்று
ஆள்கின்றது அரச!'' என்று விசுவாமித்திரரும் (322); 'சம்பரப்போர்த்
தனவனைத் தள்ளி, சதமகற்கு, அன்று, அம் பரத்தின் நீங்கா அரச அளித்த
ஆழியாய்!'' என்று இராமனும் (2437) ''தயிர் உடைக்கும் மத்து என்ன உவகை
நல சம்பரனைத் தடிந்த அந்நாள்'' (2712) என்று சடாயுவும் குறிப்பிடுதல்
காண்க.  அந்தகன் - கண்ணில்லாதவன் (கருணையற்றவன்) யமன்.    24