இராமன் துயரால் மீண்டு சோர்ந்தது கண்டு
சுக்கிரீவன் தேற்றம்

3926.என்ன நொந்து, இன்னன
     பன்னி, ஏங்கியே
துன்ன அருந்
     துயரத்துச் சோர்கின்றான்தனை,
பன்னஅருங் கதிரவன்
     புதல்வன், பையுள் பார்த்து,
அன்ன வெந் துயர்
     எனும் அளக்கர் நீக்கினான்.

     என்ன நொந்து - என்று மனம் வருந்தி;  இன்னன பன்னி -
இத்தகைய வார்த்தைகளைச் சொல்லி; ஏங்கி - ஏக்கம் உற்று; துன்ன அரும்
துயரத்து -
அடைதற்கரி துன்பத்தால்; சோர்கின்றான் தனை - மனம்
தளர்கின்ற இராமனை; பன்ன அரும் கதிரவன் புதல்வன் - புனைந்து
கூறுதற்கரிய கதிர்களை உடைய சூரியன் மகனான சுக்கிரீவன்; பையுள்
பார்த்து -
(அவன் அடைந்த) துன்பத்தைப் பார்த்து; அன்ன வெந்துயர்
எனும் அளக்கர் -
அத்தகைய கொடிய துன்பம் என்கின்ற கடலினின்று;
நீக்கினான் -
கரை ஏற்றினான்.

     பையுள் - துன்பம், அளக்கர் - கடல். அளத்தற்கரியது எனும் பொருள்
தரும்.  துயரெனும் அளக்கர் - உருவக அணி; பன்னுதல் - திரும்பத்திரும்பச்
சொல்லுதல்.                                                   26