'நின் குறை முடித்தன்றி வேறு யாதும் செய்கலேன்' என இராமன் கூறுதல் 3927. | 'ஐய,நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது, உய்வெனே? எனக்கு இதில் உறுதி வேறு உண்டோ? வையகத்து, இப் பழி தீர மாய்வது செய்வேன்; நின்குறை முடித்து அன்றிச் செய்கலேன்.' |
ஐய- அன்பனே! நீ ஆற்றலின்- நீ ஆறுதல் கூறியதால்; ஆற்றினேன் அலது - (எனது துன்பத்தை ஒருவாறு) தணித்துக் கொண்டேனே அல்லாமல்; உய்வென - (இப்பழி வந்தபின்) உயிர் தாங்கியிருப்பேனோ?எனக்கு இதில் உறுதி - எனக்குச் சாவினும் நல்லது; வேறு உண்டோ - வேறு உண்டோ (இல்லை); வையகத்து இப்பழி தீர - இவ்வுலகத்தில் எனக்கு ஏற்படும் இப்பழி நீங்க; மாய்வது செய்வென் - இறந்து போவேன்; நின்குறை முடித்தன்றி - (ஆனால்) உன்னுடைய குறையை முடித்துத் தராமல்; செய்கலேன் - (அவ்வாறு செய்யமாட்டேன். பழி நீங்க இறந்து படுதல் தன்னைப் பொறுத்தவரையில் ஏற்றது எனினும், சுக்கிரீவனுக்கு வாக்குக் கொடுத்தபடி அவன் மனைவியைக் கவர்ந்தவனைக் கொன்று அவளை மீட்டுத் தந்த பிறகே அச்செயலைச் செய்வதாகக் கூறுவது இராமன் கொண்ட வாய்மைப் பெருமையை உணர்த்தும். சுக்கிரீவன் இராமன் குறை தீர்த்தலையே முதன்மையாகக் கருதியது போல (3918) இராமனும் சுக்கிரீவன் துயர் நீக்க எண்ணியது நல்ல நட்பின் இயல்பை உணர்த்துகிறது. அன்பின் முதிர்ச்சியால் இராமன் சுக்கிரீவனை 'ஐய'! என்று விளித்தான்; இலக்குவனை 'ஐய' (1736) என்றது போல. இப்பழி என்றது, சீதையின் துயரம் போக்காமையால் தனக்கு வரக்கூடிய பழியை. நின்குறை என்பது சுக்கிரீவன் அடைந்த துன்பம். வாலி, மனைவியையும் ஆட்சியினையும் கவர்ந்து கொண்ட நிலை. அக்குறை முடித்தலாவது - வாலியைக் கொன்று, சுக்கிரீவன் மனைவியையும் அரசுரிமையினையும் மீட்டுத் தருதலாகும். உய்தல் - உயிர் தாங்கியிருத்தல்; உறுதி - நல்லது. உய்வெனே, உண்டோ - ஏகார ஓகாரம் எதிர்மறைப் பொருளன. பிறர் துயர் நோக்கும் சான்றோர் பண்பை இப்பாடல் உணர்த்துகிறது. 27 |