அனுமன், இராமனை நோக்கிப் பேசுதல்

3928.என்றனன் இராகவன்;
      இனைய காலையில்,
வன் திறல் மாருதி
      வணங்கினான்; 'நெடுங்
குன்று இவர் தோளினாய்!
      கூற வேண்டுவது
ஒன்று உளது; அதனை நீ
      உணர்ந்து கேள்!' எனா,

     என்றனன்இராகவன் - என்று கூறினான் இராமன்; இனைய
காலையில்-
இந்தச் சமயத்தில்; வன்திறல் மாருதி - மிக்க வலிமை
வாய்ந்த அனுமன்; வணங்கினான் - (இராமனைத்) தொழுது; நெடுங் குன்று
இவர் தோளினாய்-
பெரிய மலையை ஒத்த தோள்களை உடையவனே!
கூற வேண்டுவது -
'நான் உன்னிடம் கூற வேண்டியது; ஒன்று  உளது -
ஒன்று உண்டு; அதனைநீ உணர்ந்து கேள் எனா - அதை நீ கவனித்துக்
கேட்பாயாக' என்று . . . .

     இது முதல் 34வது பாடல் முடியக் குளகமாய் ஒரு தொடராய் இயைந்து
வினை முடிபு கொள்ளும். வல்திறல் - ஒரு பொருட் பன்மொழி; இவர்தல் -
ஒத்தல்.  தான் சொல்ல இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்பதால்
'உணர்ந்து கேள்' என்றான்.                                     28