3929. | 'கொடுந் தொழில் வாலியைக் கொன்று, கோமகன் கடுங் கதிரோன் மகன் ஆக்கி, கை வளர் நெடும் படை கூட்டினால் அன்றி, நேட அரிது, அடும் படை அரக்கர்தம் இருக்கை - ஆணையாய்! |
ஆணையாய் - எங்கும் செல்லத்தக்க ஆணைச் சக்கரத்தை உடையவனே! கொடுந்தொழில் வாலியைக் கொன்று - கொடிய வலிமையை உடைய வாலியை (முதலில்) கொன்று; கடுங் கதிரோன் மகன் - வெப்பம் மிக்க கதிர்களை உடைய சூரியன் மகனான சுக்கிரீவனை; கோமகன் ஆக்கி - அரசனாகச் செய்து; கைவளர் நெடும்படை - செயல்திறம் மிக்க பெரிய படையினை; கூட்டினால் அன்றி - சேர்த்தால் அல்லாது; அடும்படை - அழிக்கும் படைகளை உடைய; அரக்கர்தம் இருக்கை - அரக்கர்கள் வாழும் இடம்; நேட அரிது - தேடிக் கண்டு பிடிக்க அரிதாகும். உலகம் முழுவதும் ஆட்சி செலுத்தும் திறம் இராமனுக்கே உரியது என்பதால் 'ஆணையாய்' என விளித்தான். சீதையைத் தேடுதற்குப் பெரிய படை தேவையாதலால், அதற்குச் சுக்கிரீவனை அரசனாக்கினால், அவன் கிட்கிந்தை ஆட்சியின் பெரும்படையைப் பணிகொள்ளமுடியும். செயல்திறம் மிக்க கிட்கிந்தைப் படையை ஏவிச் சீதையைக் கண்டு பிடிக்கலாம் என்பது அனுமன் கருத்து. 29 |