3931.'எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர்,
வவ்வுவர், அவ் வழி மகிழ்ந்த யாவையும்;
வெவ் வினை வந்தென வருவர், மீள்வரால்;
அவ் அவர் உறைவிடம் அறியற்பாலதோ?

     இமைப்பின் - (அவ்வரக்கர்கள்) கண் இமைக்கும் நேரத்தில்; எவ்
உலகங்களும் -
எல்லா உலகங்களையும்; எய்துவர் - சென்று அடைவர்;
அவ்வழி -
தான் சென்ற அவ்விடங்களில்; மகிழ்ந்த யாவையும் - தாம்
விரும்பிய பொருள்கள் எல்லாவற்றையும்; வவ்வுவர் - வலிந்து கவர்ந்து
கொள்வர்; வெவ்வினை வந்தென -  (செய்த செயல்களுக்கேற்பப் பயனூட்ட
வரும்) கொடிய வினை வந்தது போல; வருவர் - (வருத்த)வருவர்; மீள்வர் -
அவ்வினை, பயனை ஊட்டியபின் செல்வது போல, உயிர்களை வருத்திய
பின்னர்த் திரும்பிச் செல்வர்; அவ் அவர் உறைவிடம் - அத்தன்மையை
உடைய அரக்கர்கள் வாழும் இருப்பிடம்; அறியற்பாலதோ - நம்மால்
அறியக்கூடியதோ? (அன்று).

     அரக்கர் தாம் வேண்டும் இடத்திற்கு வேண்டியபோது சென்று பிறரை
வருத்தி மீளும் இயல்பினராதலின் அவர்கள் தங்குமிடம் கணித்தற்கரிதாகின்றது.
'இமைப்பின்' என்பது காலவிரைவைக் காட்டிற்று; இமைப்பு - கண் இமைக்கும்
கால அளவு. உயிர்களை அவை செய்தவினை தொடரும் என்பதைச்
'செல்லுறுகதியின் செல்லும் வினை எனச் சென்றதன்றோ' (28); என முன்னும்
கூறப்பட்டது.  'தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த
கிழவனை நாடிக் கொளற்கு' என்பது (101) நாலடியார்.  இங்கு அரக்கர்க்கு
வெவ்வினை உவமையாயிற்று.                                     31