3932. | 'ஒரு முறையே பரந்து உலகம் யாவையும், திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால்; வரன்முறை நாடிட, வரம்பு இன்றால் உலகு; அருமை உண்டு, அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால். |
உலகு வரம்பு இன்று - உலகம் எல்லையற்றதாக விரிந்துள்ளது; வரன்முறை நாடிட - (அரக்கர்களை) வரிசைப்படி ஒவ்வோர் இடமாகத் தேடுவதில்; அருமை உண்டு - இடர்ப்பாடு உண்டு; அளப்ப அரும் ஆண்டும் வேண்டும் - (அவ்வாறு தேடுதற்கு) அளவற்ற ஆண்டுகள் வேண்டும்; ஒரு முறையே - (அதனால்) ஒரே சமயத்தில்; உலகம் யாவை யும் பரவி - எல்லா உலகங்களுக்கும் சென்று பரவி; திருஉறை - சீதை தங்கியிருக்கின்ற; வேறு இடம் - வேறிடத்தை; தேர வேண்டும் - தேடி அறிய வேண்டும். அரக்கர்கள் கணப்போதில் பல உலகங்களுக்குச் சென்று திரும்புவர் ஆதலின், ஒரு புறத்தே சென்று சீதையைத் தேடுகையில் அவர்கள் வேறுபுறம் கொண்டு மறைப்பார். ஒவ்வோர் இடமாய்த் தேடிச் செல்ல உலகமும் பெரிது; தேடுதற்கு ஆண்டுகள் பலவாகும். எனவே, ஒரே நேரத்தில் உலகெங்கும் பிரிந்து சென்று தேடுதல் வேண்டும் என்று அனுமன் உரைத்தான். திரு என்றது சீதாபிராட்டியை; வரன்முறை - வரிசைப்படி; யாவையும் - முற்றும்மை. 32 |