3933.'ஏழு பத்து ஆகிய
      வெள்ளத்து எம் படை,
ஊழியில் கடல் என
     உலகம் போர்க்குமால்;
ஆழியைக் குடிப்பினும், அயன்
      செய் அண்டத்தைக்
கீழ் மடுத்து எடுப்பினும்,
      கிடைத்த செய்யுமால்.

     ஏழு பத்து ஆகிய வெள்ளத்து- எழுபது வெள்ளம் என்ற அளவினை
உடைய; எம்படை - எங்கள் வானரப் படை; ஊழியில் கடல் என - யுக
முடிவுக் காலத்தில் பொங்கி எழும் கடல் போல; உலகம் போர்க்கும் -
உலகம் முழுவதும் பரவி மூடவல்லது; ஆழியைக் குடிப்பினும் - (மற்றும்அது)
கடலைக் குடிக்க வேண்டுமென்றாலும்; அயன் செய் அண்டத்தை -
நான்முகனால் படைக்கப் பெற்ற பிரமாண்டத்தை; கீழ் மடுத்து எடுப்பினும் -
கீழே கையைச் செலுத்திப் பெயர்த்து எடுக்க வேண்டுமென்றாலும்; கிடைத்த
செய்யும் -
இட்ட கட்டளையை ஏற்றுச் செய்யும்.

     வானரப்படையின் மிகுதியும், ஆற்றலும் கட்டுப்பாடும் இப்பாடலில்
உணர்த்தப்பட்டன.

     வெள்ளம் - ஒரு பேரெண். இவ்வெண்ணிக்கை முன்னரும் 'வெள்ளம்
ஏழு பத்து உள்ள' (3831) என அனுமனால் குறிக்கப்பட்டது.  வானரப்
படைகள் எதையும் செய்யவல்லன என அனுமன் உரைப்பது 'மலை
அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே, வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவனே'
எனும் (பட்டினப் 271 - 273) கரிகாலன் வீரச்செயலோடு ஒப்பிடத்தக்கது.   33