இராமன் முதலியோர் சென்ற மலைவழி

எழுசீர் ஆசிரிய விருத்தம்

3935.வெங் கண் ஆளிஏறும், மீளி
      மாவும், வேக நாகமும்,
சிங்கஏறு இரண்டொடும் திரண்ட
      அன்ன செய்கையார்,
தங்கு சாலம், மூலம் ஆர்
      தமாலம், ஏலம் மாலைபோல்
பொங்கு நாகமும், துவன்று,
      சாரலூடு போயினார்.

     வெங்கண் ஆளி ஏறும் - அச்சத்தைத் தரும் கொடிய கண்களை
உடைய ஆண் யாளியும்; மீளி மாவும் - வலிமை மிக்க புலியும்; வேக
நாகமும் -
விரைந்து செல்லும் யானையும்; சிங்க ஏறு இரண்டொடும் -
இரண்டு ஆண் சிங்கங்களுடன்; திரண்ட அன்ன செய்கையார் - ஒன்று
கூடிச் சென்றன போன்ற செய்கையரான சுக்கிரீவன் முதலான வானர வீரர்கள்;
தங்கு சாலம் -
நிலை பெற்ற ஆச்சா மரங்களும்; மூலம் - மூலம் என்னும்
மரங்களும்; ஆர் - ஆத்தி மரங்களும்; தமாலம் - பச்சிலை மரங்களும்;
ஏலம் -
ஏலமும்; மாலை போல் பொங்கு நாகமும் - மாலைகளைப் போல
மலர்கள் நிறைந்து விளங்கும் சுரபுன்னை மரங்களும்; துவன்று - நெருங்கி;
சாரலூடு போயினார் -
மலைச் சாரல்கள் வழியாகச் செல்லலானார்கள்.

     வீரர்களுள் சிறந்தவர்கள் இராமலக்குவராதலின் இருவரும் 'சிங்க ஏறு
இரண்டு' எனக் குறிக்கப்பட்டனர்.  வெங்கண் ஆளி ஏறு என்றது
சுக்கிரீவனை.  மீளிமா என்றது அனுமனை. வேக நாகம் என்றது நளன், நீலன்,
தாரன் ஆகிய வானர வீரர்களைக் குறிக்கும்.  இராமலக்குவரை இரண்டு
சிங்கங்களாகத் திரிசடை தன் கனவில் கண்டதைக் கூறுதல் காண்க. 
''வன் துணைக் கோள் அரி இரண்டு'' (5118).

     இப்பாடலில் 'சிங்க ஏறு இரண்டொடு' என்ற தொடரில் வரும் 'இரண்டு'
என்னும் எண்ணினை ''மீளிமா'' என்பதனோடும், 'வேக நாகம்' என்பதனோடும்
தனித்தனியே கூட்டி மீளிமா இரண்டு, வேக நாகம் இரண்டு எனவும் பொருள்
கொள்வர், ''மீளிமா இரண்டு'' என்றது நளன், நீலன் என்ற இருவரையும், 'வேக
நாகம்' என்றது அனுமன், தாரன் என்ற இருவரையும் குறிக்கும் என்றும்
விளக்கம் கூறுவர்.  'தமாலம்' என்பதற்கு 'மூலம் ஆர்' என்பதை அடை
மொழியாக்கி 'வேரூன்றிய பச்சிலை மரங்கள்' என்றும் பொருள் கொள்வர்.
ஏலம் - ஏலக்காய்ச் செடி; இதனைச் 'சடாமஞ்சில்' என்னும் ஒருவகை மரம்
எனக் கொள்வாரும் உளர்.  'துவன்று நிறைவாகும்' (உரியியல் - 34) என்பது
தொல்காப்பியம்.                                                1