3937. | அறங்கள் நாறும் மேனியார், அரிக் கணங்களோடும், அங்கு இறங்கு போதும், ஏறு போதும், ஈறு இலாத ஓதையால், கறங்கு வார் கழல் கலன் கலிப்ப, முந்து கண் முகிழ்த்து உறங்கு மேகம், நன்கு உணர்ந்து, மாக மீது உலாவுமே. |
அறங்கள் நாறும் மேனியார் - தருமங்கள் தோன்றுதற்குரிய திரு மேனியினராகிய இராமலக்குவர்; அரிக்கணங்களோடும் - வானரக் கூட்டங்களோடு; அங்கு - அம்மலைச் சாரல் வழியில்; இறங்கு போதும்- இறங்குகின்ற பொழுதும்; ஏறு போதும் - ஏறுகின்ற பொழுதும்; ஈறு இலாத ஓதையால் - எல்லையில்லாத ஓசையோடு; கறங்கு வார்கழல்கலன் - ஒலிக்கும் இயல்புடைய நீண்ட வீரக்கழல்களாகிய அணிகள்; கலிப்ப - ஒலித்ததால்; முந்து கண் முகிழ்த்து - முன்பு (அம்மலைகளில்) கண்மூடி; உறங்கு மேகம் - உறங்கிக் கொண்டிருந்த மேகங்கள்; நன்கு உணர்ந்து - நன்றாக விழித்தெழுந்து; மாக மீது உலாவுமே - வானில் எழுந்து சஞ்சரிக்கும். அறங்கள் நாறும் மேனியர் என்றது இராமலக்குவர்களை. உலகில் நல்லறங்களை நிலை நாட்ட அவதரித்தவர்களாதலின் 'அறங்கள் நாறும் மேனியர்' எனப்பட்டனர். 'அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்' (1349); 'வேதமும் அறனும் சொல்லும் மெய்யற மூர்த்தி வில்லோன்'' (5882) என்பன காண்க. நாறுதல்; தோன்றுதல், விளங்குதல். இவர்கள் ஏறியும் இறங்கியும், கழலணிகள் ஒலிக்க நடந்து வருதலால் மலைச் சாரல்களில் படிந்து கிடந்த மேகங்கள் சிதறின என்பதை மேகம் உறக்கம் விழித்து வானில் உலவியதாகக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி. கறங்குதல், கலித்தல் என்பன ஒலித்தல் எனும் பொருளன. 3 |