3940.மினல் மணிக் குலம் துவன்றி,
      வில் அலர்ந்து, விண் குலாய்,
அனல் பரப்பல் ஒப்ப, மீது
      இமைப்ப, வந்து அவிப்பபோல்
புனல் பரப்பல் ஒப்பு இருந்த
      பொன் பரப்பும் என்பரால் -
இனைய வில் தடக் கை
      வீரர் ஏகுகின்ற குன்றமே.

     வில் தடக்கை வீரர் - வில்லேந்திய பெரிய கைகளையுடை
(இராமலக்குவராகிய) வீரர்கள்; ஏகுகின்ற இனைய குன்றமே - ஏறிச்
செல்லும் இவ்வியல்பினதாகிய மலை; மினல் மணிக்குலம் -
மின்னுதலையுடைய இரத்தினங்களின் தொகுதி; துவன்றி - நிறைந்து; வில்
அலர்ந்து -
ஒளி பரப்பி; விண்குலாய் - விசும்பளவும் பொருந்தி; அனல்
பரப்பல் ஒப்ப -
நெருப்பைப் பரவச் செய்தல் போல; மீது இமைப்ப -
அம்மலை மீது ஒளி வீச; வந்த அவிப்ப போல - (அந்நெருப்பை விரைந்து)
வந்து அவிப்பன போல; புனல் பரப்பல் ஒப்பு இருந்த - நீரைச் சொரிந்து
பரப்புதலை ஒத்து இருந்த; பொன் பரப்பும் என்பர் - பொன் ஒளியைப்
பரவச் செய்யும் என்று கூறுவர்.

     அம்மலைகளில் இரத்தினங்கள் நெருப்புப்போல ஒளிவீச, அந்நெருப்பை
அவிக்கும் நீர்போலப் பொன்னொளி வீசும்.  இது தொடர்பு நவிற்சி அணியில்
வந்த தற்குறிப்பேற்றஅணி.  மினல் : மின்னல் - இடைக்குறை; பொன்னும்,
மணியும் நிறைந்து, பொன்னொளி தன்னுள் மணிகளின் ஒளியைத் தன்னிலடக்கி
மேற்பட்டு விளங்கும் மலை வளம்கூறப்பட்டது.                        6