3941. | மருவி ஆடும் வாவிதோறும் வான யாறு பாயும், வந்து; இருவி ஆர் தடங்கள்தோறும் ஏறு பாயுமாறுபோல், அருவி பாயும்; முன்றில், ஒன்றி யானை பாயும்; ஏனலில், குருவி பாயும்; ஓடி, மந்தி கோடு பாயும் - மாடு எலாம். |
மாடு எலாம் - மலைப்பக்கங்களிலெல்லாம்; மருவி ஆடும் வாவிதொறும் - யாவரும் (வந்து) பொருந்தி ஆடும் சுனைகளில்; வானயாறு வந்து பாயும் - ஆகாய கங்கை வந்து பாயும்; இருவி ஆர் தடங்கள் தோறும் - கதிர் அறுக்கப்பெற்ற தினைத்தாள்கள் பொருந்திய புனங்கள் தோறும்; ஏறு பாயுமாறு போல - காளை பாய்வது போல; அருவி பாயும் - மலையருவிகள் பெருகிப் பாயும்; முன்றில்- அம்மலைத் தடத்து முற்றங்களில்; யானை ஒன்றிப் பாயும் - யானை பொருந்திப் பாயும்; ஏனலில் குருவி பாயும்- தினைக்கதிர்களில் குருவிகள் பாயும்; மந்தி ஓடி - குரங்குகள் தாவி; கோடு பாயும் - மரக்கிளைகளில் பாயும். மலையின் பல்வேறு சிறப்புகளை இப்பாடல் உணர்த்தும். ''வாவி தோறும் வான யாறு பாயும்'' என்றதனால் மலையின் உயர்ச்சி தோன்றும், 'இருவி ஆர் தடங்கள் தோறும் ஏறுபாயுமாறு போல அருவி பாயும்' என்றதால் மலைவாழ் மக்களின் தொழில், காளையின் உள்ளக் கிளர்ச்சி, மலையின் நீர் வளம் புலப்படும். 'முன்றில் யானை ஒன்றிப் பாயும்' என்பதில் அருவி வளத்தோடு யானையின் இன்ப விளையாட்டும் காண்க. 'ஏனலில் குருவி பாயும்' என்பதால் மலை வாழ்நர் குருவிகளை விலக்கவேண்டா அளவு மலைக்கண் கிடைக்கக்கூடிய உணவுப் பெருக்கமும் 'மந்தி கோடு பாயும்' என்பதால் கனிகளை உண்டு மகிழ்ந்து தாவி விளையாடும் அளவிற்கேற்பக் கிடைக்கும் கனி வளமும் புலப்படும். மேலே 3938 ஆம் பாடலில் 'யூகம்' என்பதற்குத் தந்த விளக்கத்தை இப்பாடலின் 'மந்தி'க்கும் கொள்க. அனைவரும் மகிழ்வதற்கேற்ற இடமாக மலை விளங்கியது. இருவி - கதிர் அறுக்கப்பெற்ற தினைத்தாள்; ஏனல் - தினை. 'பாயும்' என்னும் சொல் ஒரே பொருளில் பல இடங்களில் வந்தமையால் 'சொற்பொருள் பின்வருநிலை அணி. 7 |