இராமன் வெளியிட்ட கருத்துரை

3944.அவ் இடத்து, இராமன், நீ
      அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து போர்
      விளைக்கும் ஏல்வை, வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது; என்
      கருத்து இது' என்றனன்;
தெவ் அடக்கும் வென்றியானும்,
      'நன்றிஇது' என்று சிந்தியா.

     அவ் இடத்து - அப்போது; இராமன் - இராமபிரான்; நீ அழைத்து -
(சுக்கிரீவனை நோக்கி) ''நீ வலிய (போர்க்கு) அழைத்து; வாலி ஆனது ஓர்
வெவ்விடத்தின் -
வாலி என்னும் ஒப்பற்ற கொடிய நஞ்சுடன்; வந்து -
எதிர்வந்து; போர் விளைக்கும் ஏல்வை- போர் செய்யும் பொழுது; வேறு
நின்று -
வேறாக (ஓரிடத்தில் நான்) நின்று; எவ்விட - அம்பு தொடுப்பதாக;
துணிந்து அமைந்தது இது என் கருத்து -
துணிந்தேன்; இச்சூழ்நிலைக்கு
இக்கருத்தே பொருந்துவதாகும்; என்றனன் - என்று கூறினன்; தெவ்
அடக்கும் -
பகைவனைப் பொருதழிக்கும்; வென்றியானும் - வெற்றியை
விரும்புபவனாகிய சுக்கிரீவனும்; இது நன்று - 'இச் செயல் நல்லதாகும்';
என்று சிந்தியா -
என்று சிந்தித்து. . . .

     ஆலகால நஞ்சினை ஒத்துப் பிறர் உயிர் கவரும் கொடுஞ் செயல்
குறித்து 'வாலி ஆனதோர் வெவ்விடம்' என்றான்.  வேறு நிற்றல் - பிறா
அறியாத வகையில் மறைந்து நிற்றல்.  ''நானும் நீயும் வேறித்திருக்க
வேண்டும்'' (பெரிய புராணம் - மெய்ப்பொருள் 13) என்ற இடத்து 'வேறு'
என்பது பிறர் அறிய முடியாததனியிடம் என்ற பொருளில் வருதல் காண்க.  ஏ
+ விட = எவ்விட என எதுகை நோக்கிக் குறுகி நின்றது.  'துணிந்து
அமைந்தது' என்ற தொடரினை 'எண்ணித் துணிக கருமம்' என்ற குறளின்
(467) தொடரோடு ஒப்பிட்டு உணர்க.  இராமபிரான் திட்டமிட்டுத் துணிந்தமை
நினைவுகொள்ளத் தக்கது.  வாலியை அடக்கி வெற்றி பெறுதலையே எண்ணிக்
கொண்டிருந்த சுக்கிரீவனுக்கு இராமன் கூறிய வழி நல்லோர் உபாயமாகத்
தோன்றியது என்பதால் 'தெவ் அடக்கும் வென்றியானும், 'நன்று இது' என்று
சிந்தியா' என்றார்.  இனி, 'தெவ் அடக்கும் வென்றி யானும்' என்ற தொடர்க்கு
இராமன் எனப் பொருள் கொண்டு 'இராமன் இது நன்று எனச் சிந்தித்துச்
சுக்கிரீவனிடத்து 'நீ வாலியை வலியப் போருக்கழைத்துப் போர் செய்கையில்
நான் வேறிடத்திலிருந்து அம்பு தொடுப்பது என் கருத்து' எனக் கூறியதாம்.
                                                            10