சுக்கிரீவன் வாலியைப் போருக்கு அழைத்தல் 3945. | வார்த்தை அன்னது ஆக, வான் இயங்கு தேரினான் மகன், நீர்த் தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே, வேர்த்து மண்உளோர் இரிந்து, விண்உளோர்கள் விம்ம, மேல் ஆர்த்த ஓசை, ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே. |
வார்த்தை அன்னது ஆக - இராமன் கூறிய வார்த்தை அவ்வாறாக; வான் இயங்கு தேரினான் மகன் - (அது கேட்டு) வானத்தில் இடைவிடாது செல்கின்ற தேரை உடைய சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன்; நீர்த் தரங்க வேலை அஞ்ச - நீர் நிறைந்த அலைகளை உடைய கடல் அஞ்சும் படியாகவும்; நீல மேகம் நாண - நீல நிறமுள்ள மேகங்கள் வெட்கமடையும் படியாகவும்; மண் உளோர் வேர்த்து இரிந்து- மண்உலகத்தில் உள்ளவர்கள் உடல் வியர்த்து ஓடவும்; விண் உளோர் விம்ம - வானுலகத்தவராய தேவர்கள் கலங்கும் படியாகவும்; மேல் ஆர்த்த ஒசை - மிகுதியாக ஆரவாரம் செய்த ஓசையானது; ஈசன் உண்ட - ஈசனாகிய திருமாலால் உட்கொள்ளப் பெற்ற; அண்டம் முற்றும் உண்டது - அண்டப் பரப்பு முழுமையினையும் தன்னகத் தடக்கி மேலோங்கியது. வார்த்தை - முன் பாடலில் இராமன் கூறிய மொழி; சுக்கிரீவன் எழுப்பிய பேரொலி, அலைகடல் முழக்கத்தையும் இடி முழக்கத்தையும் கீழ்ப்படுத்தி மேலோங்கியதால் 'நீர்த்தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே ஆர்த்த ஓசை' என்றார், சுக்கிரீவன் ஆரவாரத்தைக் கேட்ட மண்ணுளோரும் விண்ணுளோரும் உடல் வியர்த்து நடுங்கி ஓடினர் என்பதை 'வேர்த்து மண்ணுளோர் அரிந்து விண்ணுளோர்கள் விம்ம' என்றார். ஊழி இறுதியில் திருமாலால் உட்கொள்ளப் பெற்ற அண்டங்கள் முழுவதிலும் அவன் பேரொலி நிரப்பியதால் 'ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டது' என்றார். நீலமேகம்- நீருண்டதால் கறுத்து விளங்கும் மேகம்; வியர்த்தல், இரிந்தோடுதல், விம்முறல் ஆகியன அச்சத்தால் உண்டாகும் மெய்ப்பாடுகள். இரிந்து - இரிய; எச்சத்திரிபு. ஈசன் - இங்குத் திருமாலைக் குறித்தது. பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும், ஈசற்கே கடன் (10187) என்ற இடத்து இராமனை ஈசன் என்ற பெயரால் குறித்தது காணக். ஓசை அண்டம் முற்றும் உண்டது - உண்ண முடியாததை உண்டது போலச் சொன்ன மரபு வழுவமைதி. 11 |