3946. | இடித்து, உரப்பி, 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று, அடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து, அலங்கு தோள் புடைத்து நின்று, உளைத்த பூசல் புக்கது என்ப - மிக்கு இடம் துடிப்ப, அங்கு உறங்கு வாலி திண் செவித் துளைக்கணே. |
வந்து போர் எதிர்த்தியேல் - 'என்னுடன் நீ போரில் எதிர்த்து வருவாயானால்; அடர்ப்பென் என்று - யான் உன்னைக் கொல்வேல் என்று; இடித்து உரப்பி - அதட்டிக் கூறி; அடித்தலங்கள் கொட்டி - தன் கால்களால் ஓசை உண்டாகுமாறு தரையில் மிதித்து; வாய் மடித்து - சினத்தால் வாய் உதடுகளை மடித்துக் கொண்டு; அடுத்து அலங்கு தோள் புடைத்து - அடுத்து விளங்குகின்ற தன் தோள்களைத் தட்டிக் கொண்டு; நின்று உளைத்த பூசல் - நின்று வலியப் போருக்கு அழைத்த (சுக்கிரீவனின்) ஆரவாரம்; அங்கு - கிட்கிந்தை நகரத்தில்; இடம் மிக்குத் துடிப்ப - இடத் தோளும் இடக்கண்ணும் துடிக்க; உறங்கு வாலி - உறங்கிக் கொண்டிருக்கும் வாலியின்; திண்செவித் துளைக்கண் - வலிய செவித்துளையிலே; புக்கது என்ப - சென்று புகுந்தது என்பர். அடித்தலம் கொட்டுதல் - பாதங்களைத் தரையில் தட்டி மிகுத்து ஓசை உண்டாகும்படி நடத்தல்: வாய்மடித்தல் - வெகுளியின் மெய்ப்பாடு. ஆடவர்க்கு இடப்பக்கம் துடித்தல் தீ நிமித்தத்திற்கு அறிகுறி என்பர். சுக்கிரீவனின் ஆரவாரம் வாலியின் செவியில் படுகையில், அவனது அழிவைக் குறிக்கும் வகையில் அவனது இடப்பக்கம் 'துடித்த' செய்தி கூறப்பட்டது. 'மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத், துன்னு தோளும், இடம் துடியா நின்றான்' (7348). 'செயிரில் தீர்ந்த செழுந்தாமரைக் கண் இடனாடலும் (சிந்தா. 1156), ''இடுக்கண் தருதற் கேதுவாகி, இடக்கண் ஆடலும்'' (பெருங்கதை. 2-18- 32-33) என்னும் இடங்கள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன. பூசல் - போர் ஆரவாரம். முதல் 12 பாடல்களை நான்கு சீரடிகளாய்ப் பிரித்து கலிவிருத்தம் என்றும்கொள்வதுண்டு. 12 |