வாலி போருக்கு எழுதல் கலிவிருத்தம் 3947. | மால் பெருங் கட கரி முழக்கம் வாள் அரி ஏற்பது செவித்தலத்து என்ன, ஓங்கிய ஆர்ப்பு ஒலி கேட்டனன் - அமளிமேல் ஒரு பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான். |
அமளி மேல் - படுக்கையின் மேல்; ஒரு பாற்கடல் கிடந்ததே அனைய - ஒப்பற்ற பாற்கடல் படுத்திருந்தது போன்ற; பான்மை யான் - தன்மையை உடையவனாகிய வாலி; மால்பெரும் கடகரி முழக்கம் - மயக்கம் கொண்ட பெரிய மதயானையின் முழக்கத்தை; வாள் அரி செவித்தலத்து - கொடிய சிங்கம் தன் காதுகளில்; ஏற்பது என்ன - ஏற்றுக் கொண்டாற்போல; ஓங்கிய ஆர்ப்பு ஒலி - மிகுதியாக எழுந்த (அச்சுக்கிரீவனின்) கர்ச்சனை ஒலியை; கேட்டனன் - கேட்டான். மலை முழையினுள் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிங்கம் மதயானையின் பிளிறலைக் கேட்டது போலத் தன் அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த வாலி சுக்கிரீவனின் போர்முழக்கத்தைக் கேட்டான். உவமை அணி. வாலி கம்பீரமான தோற்றமும் வெண்ணிறமும் கொண்டவனாதலின் 'பாற் கடல் கிடந்ததே அனைய பான்மையான்'எனப்பட்டான். வாலி வெண்ணிற மேனியன் என்பதை 'இந்திரன் தனிப்புதல்வன், இன்னனிச் சந்திரன் தழைத்தனைய தன்மையான்' (3834). ''பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார்' (3979) என்ற அடிகளும் உணர்த்தும். இராவணன் அமளியில் படுத்திருந்ததை 'மால் பெருங்கடல் வதிந்ததே அனையதோர் வனப்பினர் துயில்வானை'' (5040). என்று கூறியிருத்தலை ஒப்பிட்டுக் காணலாம். வாலியைக் கரி முழக்கம் கேட்ட அரிக்கு உவமித்தமையால் வாலி எளிதில் அழிக்கத்தக்கவன் அல்லன் என்று அவன் வலிமை மிகுதியே உணர்த்தப்பட்டுள்ளது. ஆர்ப்பு ஒலி - ஒரு பொருட் பன்மொழி. 13 |