3949. | எழுந்தனன், வல் விரைந்து இறுதி ஊழியில் கொழுந் திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்; அழுந்தியது, அக் கிரி; அருகில் மால் வரை விழுந்தன, தோள் புடை விசித்த காற்றினே. |
ஊழி இறுதியில் - ஊழி இறுதியாகிய யுக முடிவில்; கொழுந் திரைக்கடல் - பெரிய அலைகளோடு கூடிய கடல்; கிளர்ந்தனைய - பொங்கி எழுந்தாற்போன்ற; கொள்கையான் - செருக்குடையவனாய் (வாலி); வல் விரைந்து எழுந்தனன் - (சுக்கிரீவனை அழிக்கும் பொருட்டு) மிகவிரைந்து எழுந்தான்; அக்கிரி அழுந்தியது- (அவன் எழுந்த வேகத்தால்) அந்தக் கிட்கிந்தைமலை நிலத்தினுள்ளே அழுந்தியது; தோள்புடை விசித்த காற்றின்- (அவன்) தோள்களைப் பக்கங்களில் அசைத்து எழுப்பிய காற்றினாய்; அருகில் மால்வரை - (அந்த மலையின்) அருகில் இருந்து பெரிய மலைகள்; விழுந்தன - நிலை பெயர்ந்து கீழே விழுந்தன. இறுதி ஊழியில் என்பதனை ஊழி இறுதியில் எனக் கொள்க. கொள்கை யான் - வீரமிகுதி, செருக்கு உடையான். வல் - விரைவை உணர்த்தும் இடைச் சொல். வல்விரைந்து - ஒரு பொருட் பன்மொழி. நிலத்தில் கிரி அழுந்துதலும், மால்வரைகள் விழுதலும் வாலியின் சினமிகுதியினையும் ஆற்றலையும் உணர்த்தும். உயர்வு நவிற்சி அணி. 15 |