3951. | கைக் கொடு கைத்தலம் புடைப்ப, காவலின் திக் கயங்களும் மதச் செருக்குச் சிந்தின; உக்கன உரும்இனம்; உலைந்த உம்பரும்; நெக்கன, நெரிந்தன, நின்ற குன்றமே. |
கைக் கொடு கைத்தலம் புடைப்பு - (வாலி சினத்தால்) ஒரு கையினைக் கொண்டு மற்றொரு கையினைத் தட்ட; காவலின் திக்கயங்களும்- (அதனால் எழுந்த ஓசையால்) உலகினைத் தாங்கி நின்று காவல் புரியும்எட்டுத்திசை யானைகளும்; மதச் செருக்குச் சிந்தின - மதக் களிப்பாகியசெருக்கினை நீங்கின; உரும் இனம் உக்கன - இடியின் கூட்டங்கள் (தம்வலிமை குறைந்து) உதிர்ந்தன; உம்பரும் உலைந்த - தேவர் உலகங்களும்வருந்தின; நின்ற குன்றம் - (பெயர்தலின்றி) நிலை பெற்றிருந்த மலைகளும்; நெக்கன நெரிந்தன - பிளவுபட்டு நொறுங்கின. வாலி தன் இரு கரங்களைத் தட்டி எழுப்பிய ஒலியால் வலிமை வாய்ந்ததிக்கு யானைகளும், இடியின் கூட்டமும், மலைகளும் நிலைகலங்கின என்பதால் வாலியின் வலிமை மிகுதி உணர்த்தப்படுகிறது. நெக்குதல் - நெகிழ்ந்து பிளவுபடல். ''நெட்டிருப்புப் பாறைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்து வேருக்கு நெக்கு விடும்'' என்பது நல்வழி.(33). 17 |