3952. | 'வந்தெனன்! வந்தெனன்!' என்ற வாசகம் இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன; சந்திரன் முதலிய தாரகைக் குழாம் சிந்தின, மணி முடிச் சிகரம் தீண்டவே. |
வந்தனென்! வந்தனென்!- 'வந்து விட்டேன், வந்து விட்டேன்'; என்ற வாசகம் - என்று வாலி கூறிய சொற்கள்; இந்திரி முதல் - இந்திரனுக்குரிய கிழக்குத் திசை முதல்; திசை எட்டும் கேட்டன - எட்டுத் திசைகளிலும் கேட்டன; மணி முடிச்சிகரம் தீண்டவே - (அவன் போருக்குக் கிளர்ந்து எழுந்தபோது) அவனது மணிகள் இழைக்கப்பெற்ற முடியின் உச்சி தம் மேல் பட்டதால்; சந்திரன் முதலிய - (வானத்தில்) சந்திரனைத் தம் தலைவனாகக் கொண்ட; தாரகைக் குழாம் சிந்தின - விண்மீன் தொகுதிகள் கீழே சிதறி விழ்ந்தன. வந்தனென், வந்தனென் - வெகுளியின் வந்த அடுக்குத் தொடர். இந்திரி - இந்திரனது திசையாகிய கிழக்கு. 'திசை எட்டும் கேட்டன' என்பது அவனது உரத்த குரலையும் 'மணிமுடிச் சிகரம் தீண்டத் தாரகைக் குழாம் சிந்தின' என்பது அவன் வடிவத்தின் உயர்வையும் பெருமையினையும் குறித்தன. சந்திரன் நட்சத்திரங்களின் தலைவனாதலின் 'சந்திரன் முதலிய தாரகைக் குழாய்' என்றார். தாரகாபதி, உடுபதி என்னும் பெயர்கள் சந்திரனுக்கு உரியன. உயர்வு நவிற்சி அணி. 18 |