3953.வீசின காற்றின் வேர் பறிந்து, வெற்புஇனம்
ஆசையை உற்றன; அண்டப் பித்திகை
பூசின, வெண் மயிர் பொடித்த வெம் பொறி;
கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே.

     வீசின காற்றின் - (வாலி எழுந்த வேகத்தால்) வீசின காற்றினால்;
வெற்பு இனம் -
மலைக் கூட்டங்கள்; வேர் பறிந்து - நிலை
பெயர்ந்தவனாய்; ஆசையை உற்றன - திசையின் எல்லையை அடைந்து
வீழ்ந்தன; வெண்மயிர் பொடித்த வெம்பொறி - (மேனியில் அடர்ந்துள்ள)
வெண்மை வாய்ந்த மயிர்க்கால் தொறும் தோன்றிய வெம்மையுடைய
அனற்பொறிகள்; அண்டப் பித்திகை பூசின- அண்டப்பரப்பின் மதிற் சுவரை
மறைத்தன; அந்தகன் கூசினன் - (இவ்வாறு சினத்துடன் வரும்
வாலியைக்காண) யமனும் கண் கூசினான்; உம்பர் குலைந்தது - தேவர்களும்
நிலை குலைந்தனர்.

     இப்பாடல் வாலியின் வேகத்தையும் சினமிகுதியையும் விளக்கும். வெண்
மயிர் பொடித்த வெம்பொறி - மயிர்க்கால்களில் இருந்து எழுந்த தீப்பொறிகள்.
'அண்டப் பித்திகை பூசின' என்றதால் அண்டச்சுவர்கள் வரை இவன் சினத்தீப்
பொறிகள் சென்று ஒளி வீசின என்பதாம். உம்பர் - மேல் உலகம்; இடவாகு
பெயராய்த் தேவர்களைக் குறிக்கும். அந்தகன். உயிர்கட்கு அந்தத்தைச்
செய்வோனாகிய இயமன்.                                         19