3954.கடித்த வாய் எயிறு உகு
      கனல்கள் கார் விசும்பு
இடித்த வாய் உகும்
      உரும் இனத்தின் சிந்தின;
தடித்து வீழ்வன எனத்
      தகர்ந்து சிந்தின,
வடித்த தோள் வலயத்தின்
      வயங்கு காசு அரோ.

     கடித்த வாய் எயிறு உரு - (வாலி வெகுண்டு) கடித்த வாயிலிலுள்ள
பற்களினின்று வெளிப்பட்ட; கனல்கள் - தீப்பொறிகள்; கார்விசும்பு
இடித்தவாய்
- கரிய மேகங்கள் விசும்பிடத்து ஒன்றோடொன்று மோதிய
நிலையில்; உகும் உரும் இனத்தின் - விழும் இடிகளின் கூட்டம் போல;
சிந்தின -
எங்கும் சிதறின.வடித்த தோள் வலயத்தின் - (அவன்
தோள்தட்டி ஆர்த்த நிலையில்) சிறந்த அவன் தோள் வளைகளில்; வயங்கு
காசு -
விளங்குகின்ற இரத்தினங்கள்; தடித்து வீழ்வன என - மின்னல்கள்
கீழே விழுந்தாற்போல; தகர்ந்து சிந்தின - சிதறி வீழ்ந்தன.

     எயிறு தோன்றப் பற்களைக்கடித்தல் - வெகுளியில் தோன்றும் மெய்ப்
பாடு. காசு- இரத்தினம். 'தப்பின மணி, காசும், சங்கமும் மயிலன்னார்' (1189)
'திறம் செய் காசு ஈன்ற சோதி' (1129) என்னும் இடங்களில் இரத்தினம் எனும்
பொருளில் 'காசு' ஆளப்பட்டுள்ளமை காண்க.  தடித்து - மின்னல். வாலியின்
வெகுளி மிகுதியை உயர்வு நவிற்சியால் கூறிய பாடல்.  அரோ -அசை.  20