சுக்கிரீவன் அரசு புரிதல்

4146. ஆரியன் அருளின் போய்த் தன்
      அகல் மலை அகத்தன் ஆன
சூரியன் மகனும், மானத்
      துணைவரும், கிளையும், சுற்ற,
தாரையை வணங்கி, அன்னாள் தாய்
      என, தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன,
      செவ்விதின் அரசுசெய்தான்.

     ஆரியன் அருளின் போய் - இராமன் கட்டளைப்படி கிட்கிந்தை
சென்று; தன் அகல் மலை அகத்தன் ஆக - தனக்குரிய அகன்ற மலையின்
உள்ளிடத்தைச் சேர்ந்தவனான; சூரியன் மகனும் - சூரியன் மகனாகிய
சுக்கிரீவனும்; மானத் துணைவரும் - (அரசாட்சிக்குத் துணையாயுள்ள)
பெருமை பொருந்திய அமைச்சர் முதலியோரும்; கிளையும் சுற்ற -
உறவினர்களும் தன்னைச் சூழ்ந்து நிற்க; தாரையை வணங்கி - (தன்
தமையன் மனைவியான) தாரையை வணங்கி; அன்னாள் தாய் என - அவள்
தனக்குத் தாய் என்று சொல்லும்படியாகவும்; முந்தைச் சீரியன் சொல்லே -
தனக்கு முனபிறந்தவனும் சிறப்புள்ளவனுமான வாலியின் அறிவுரைகளே;
தந்தை என்ன -
தனக்குத் தந்தை என்று சொல்லும்படியாகவும்; செவ்விதின்
அரசு செய்தான் -
செம்மையாக அரசாட்சியை நடத்தலானான்.

     தமையனைத் தந்தையைப் போல மதித்தலும், அவன் மனைவியைத்
தாயெனக் கருதுதலும் சான்றோர் நெறியாகும்.  அவ்வாறே சுக்கிரீவன்
தாரையை வணங்கித் தாய் போல மதித்து அவள் சொற்படி நடப்பவனாயினன்
என்பதும், வாலி இறந்து விட்டதால் அவன் சொல்லியதைச் செய்தலையே
தந்தை சொற்படி ஆட்சி செய்தலாகக் கொண்டனன் என்பதும் பாடலின் இறுதி இரண்டடிகள்
உணர்த்துகின்ற செய்திகளாகும்.  வாலி இறக்கும் நிலையில் சுக்கிரீவனுக்குச்
சில அறிவுரைகளைக் கூறியது வாலிவதைப் படலத்தில் கூறப்பட்டது.
அவ்வுறுதி மொழிகளைத் தலைமேற்கொண்டு சுக்கிரீவன் ஆட்சி புரிந்தான்
என்க.

     மானத்துணைவர் - ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் மற்றும் மந்திரச்
சுற்றத்தாருமாவர்.  அவர்கள் எல்லாச் சிறந்த பண்புகளும் பெற்றிருந்தமை
பற்றி 'மானத்துணைவர்' எனப்பட்டனர்.  கம்பர் கூறும் அமைச்சர்
மாண்புகளை 1318 - 1321 - எண் பாடல்களில் காண்க.  அமைச்சர்
முதலியோர் உறுதிச்சுற்றம் எனப் படுவராதலால், அவர்கள் உரிய சமயங்களில்
வந்து சூழ்ந்து உதவுதலை 'மானத் துணைவர் சுற்ற' என உரைத்தார்.
'சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்'
(குறள் - 445) என்றார் வள்ளுவர்.  சுற்றம் தழுவி வாழ்தல் செல்வம்
படைத்ததன் பயனாதலாலும், செல்வம் பெருக்கவும் காக்கவும்
வேண்டியிருத்தலானும் 'கிளை சுற்ற' என்றார்.  சுக்கிரீவனின் பண்பால்
சுற்றத்தினார் அவனைத் தழுவி வாழ்ந்தனர் என்க.

     வான்மீகத்தில் தாரை சுக்கிரீவனோடு வாழ்ந்தாள் என்று கூறப்
பெற்றிருக்க,  அவளைத் தாயாகச் சுக்கிரீவன் கருதினான் எனக் கம்பர்
கூறியிருப்பது போற்றத் தக்கதாகும்.  அத்யாத்மராமாயணம், தாரை இராமன்
உபதேசம்பெற்று வாலியின் மறைவால் நேர்ந்த மனத்தளர்ச்சி நீங்கி,
மெய்ஞ்ஞானம் அடைந்து ஜீவன் முக்தி நிலையடைந்தாள் என்று கூறுகிறது.
                                                          32