3957. 'விலக்கலை; விடு; விடு; விளித்துளான் உரம்
கலக்கி, அக் கடல் கடைந்து அமுது கண்டென,
உலக்க இன் உயிர் குடித்து, ஒல்லை மீள்குவல்,
மலைக் குல  மயில்!'  என, மடந்தை கூறுவாள்:

     மலைக்குல மயில்! - மலையில் வாழும் சிறந்த மயில் போன்ற வளே!
விலக்கலை -
என்னைத் தடை செய்யாதே; விடு விடு- என்னை விட்டுவிடு;
அக்கடல் கடைந்து -
அந்தப் பாற்கடலைக் கடந்து; அமுது கண்டென -
அமுதை எடுத்தாற்போல; விளித்துளான் உரம் கலக்கி - என்னைப்
போருக்கு அழைத்த அச்சுக்கிரீவனின் வலிமையைக் குலையச் செய்து; உலக்க
இன் உயிர் குடித்து -
(அவன்) அழகிய (அவனது) இனிய உயிரைப் பருகி;
ஒல்லை மீள்குவல் -
விரைவில் திரும்பி வருவேன்; என - என்று (வாலி)
கூற; மடந்தை கூறுவான் - தாரை சொல்வாள்.

     மயில் - உவமை ஆகுபெயராய்த் தாரையைக் குறித்தது. மயில் குறிஞ்சி
நிலத்துப்பறவையாதலின், மலையில் வாழும் தாரைக்கும் ஏற்கும்.  மலைக்குல
மயில் - அண்மைவிளி. விலக்கலை - எதிர்மறை ஏவல் வினைமுற்று; விடுவிடு-
விரைவு பற்றி வந்த அடுக்குத் தொடர்.  உயிர் குடித்து - அச்செயலின்
எளிமையைக் குறிக்கக் கூறப்பட்டது.  உண்ணப்படாதது உண்ணப்படுவது
போலச் சொல்லப்பட்டது மரபுவழுவமைதி.  இலக்கணை என்றும் கூறலாம்.
அக்கடல் - அகரம் பண்டறிசுட்டு.                                23