3958. | 'கொற்றவ! நின் பெருங் குவவுத் தோள் வலிக்கு இற்றனன், முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்; பெற்றிலன் பெருந் திறல்; பெயர்த்தும் போர் செயற்கு உற்றது, நெடுந் துணை உடைமையால்' என்றாள். |
கொற்றவ - (தாரை வாலியை நோக்கி) வெற்றியை உடைய அரசனே! நின்பெருங் குவவுத் தோள் - உன்னுடைய பெருமை மிக்க திரண்ட தோள்களின்; வலிக்கு - வலிமைக்கு; முன்னைநாள் - முன்; இற்றனன் - வலிமை அழிந்து; ஈடு உண்டு ஏகினான் - வருத்தமுற்றுச் சென்றவனான சுக்கீவன்; பெருந்திறல் பெற்றிலன் - (நின்னை எதிர்த்துப் போர் செய்ய) பேராற்றலைப் புதிதாகப் பெற்றானில்லை; பெயர்த்தும் போர்செயற்கு - (அவ்வாறாக) மீண்டும் உன்னோடு போர்செய்வதற்கு; உற்றது - வந்துற்றமை; நெடுந்துணை உடைமையால்- பெரிய ஒரு துணையினைப் பெற்றமையாலாகும்; என்றாள் - என்று சொன்னாள். நாட்டையும் ஆளும் தகுதியும் திறலும் உடையவனாதலின் தாரை வாலியைக் 'கொற்றவ' என விளித்தாள். குவவு - திரட்சி; ஈடு உண்டு - வருத்தமுற்று. ஈடு - வருத்தம். 'ஈடினால் இருந்தெண்ணி' என்பது சிந்தாமணி (1762). நெடுந்துணை - துன்பம் மிக்க காலத்திலும் நீங்காது நெடிது நின்று உதவும் துணை; ஈண்டு இராமனைக் குறிக்கும். பெயர்த்தும் போர்செயற்கு உற்ற காரணத்தை ஊகித்தறியும் தாரையின் அறிவுத்திறன் ஈண்டு நோக்கத்தக்கது. 24 |