3962. 'ஆற்றல் இல் அமரரும்,
      அவுணர் யாவரும்,
தோற்றனர்; எனையவர்
      சொல்லற்பாலரோ?
கூற்றும், என் பெயர் சொலக்
      குலையும்; ஆர், இனி
மாற்றவர்க்கு ஆகி வந்து,
      எதிரும் மாண்பினார்?

     ஆற்றல் இல் அமரரும் - வலிமையில்லாத தேவர்களும்; அவுணர்
யாவரும் -
அசுரர்கள் எல்லோரும்; தோற்றனர் - தோற்றுப் போனவர்கள்;
எனையவர் -
எத்தனை பேராவர்; சொல்லற்பாலரோ? - (என்று) சொல்லும்
தன்மையர் ஆவரோ?கூற்றும் - யமனும்; என் பெயர் சொல - என்
பெயரைப் பிறர் சொல்லக் கேட்டால்; குலையும் - நடுங்குவான்.
மாற்றவர்க்கு ஆகிவந்து - (அதனால்) எனது பகைவனான சுக்கிரீவனுக்குத்
துணையாகி வந்து; எதிரும் மாண்பினார் - என்னைப் போரில் எதிர்க்கும்
திறமையுடையவர்; இனி ஆர் - இனியார் உள்ளனர்? (ஒருவரும் இலர்).

     வாலி தன் வீரமிகுதியைத் தாரைக்கு உரைத்தனன்.  தேவர்களையும்,
அசுரர்களையும், யமனையும் அஞ்சுமாறு செய்யும் அவனை எதிர்க்கக்கூடியவர்
எவரும் இரார் என்பதால் 'எதிரும் மாண்பினார் ஆர்?' எனத் துணிந்து
பேசினான்.  கூற்றும் - உயர்வு சிறப்புஉம்மை.                       28