3965.'உழைத்த வல் இரு
      வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு
      அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு, இயல்பு அல
      இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை; பாவி! உன்
      பெண்மையால்' என்றான்.

     பாவி - தீவினை உடையவளே! உழைத்த வல் இருவினைக்கு -
வருந்திச் சேர்த்த கொடிய இருவினைகளுக்கு; ஊறு காண்கிலாது -
அழிவினைச் செய்யும் வழியினைக் காண முடியாமல்; அழைத்து -
(இறைவனை அருள்வேண்டி) அழைத்து; அயர் உலகினுக்கு - வருந்துகின்ற
உலக உயிர்களுக்கு; அறத்தின் ஆறு எலாம் - தருமத்தின்
வழிகளையெல்லாம்; இழைத்தவற்கு - தன் நடைமுறையால் காட்டிய அந்த
இராமபிரானுக்கு; இயல்பு அல இயம்பி - பொருந்தாதவற்றைச் சொல்லி; என்
செய்தாய் -
என்ன தவறு செய்துவிட்டாய்! உன் பெண்மையால் - உன்
பெண் தன்மைக்கேற்ற பேதைமையால்; பிழைத்தனை என்றான் - பெரிய
பிழையைச் செய்து விட்டாய்' என்றான்.

     நல்வினையும் தீவினையும் தொடர்ந்துவந்து பலன் அளிப்பன ஆதலின்
'வல் இருவினை' என்றார். ஊறு - உறு என்னும் முதனிலை திரிந்த
தொழிற்பெயர். இராமபிரான் தருமத்தை வாழ்ந்து காட்டுபவனாதலின் 'அறத்தின்
ஆறு எலாம் இழைத்தவற்கு' என்றான். 'மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
மாதவம் அறத்தொடும் வளர்த்தார் (97) 'உண்டு எனும் தருமமே உருவமா
உடைய நின் கண்டு கொண்டேன்' (4066); ''அறைகழல் இராமன் ஆகி,
அறநெறி நிறுத்த வந்தது'' (4073) என்ற அடிகள் ஒப்பு நோக்கத்தக்கன.
'இயல்பு அல என்பது இராமனது பண்புக்கு ஒவ்வாத சொற்கள். தாரை
இங்ஙனம் பிழைபடப் பேசியதற்குப் பெண்ணறிவாகிய பேதைமையால்
என்கிறான். 'பெரிய பேதைமைச் சின்மதிப் பெண்மையால்' என்று சீதை
கூறுவதும் காண்க. (5356) உன் பெண்மையால் பிழைத்தனை என்ற தொடர் 'நீ
பெண் ஆதலால் உயிர் தப்பினாய்' என்ற பொருளும் தந்து நிற்கிறது. தாரை
கூறிய தவறான வார்த்தை கருதி அவளைப் 'பாவி' என விளித்தான் வாலி. 31