3966. | 'இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது பெருமையோ? இங்கு இதில் பெறுவது என்கொலோ? அருமையின் நின்று, உயிர் அளிக்கும் ஆறுடைத் தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான்அரோ? |
இருமையும் நோக்குறும் - இம்மை, மறுமை என்னும் இரண்டின் பயன்களையும் பார்க்கும்; இயல்பினாற்கு - இயல்பினையுடைய இராமனுக்கு; இது பெருமையோ - நீ கூறியபடி செய்வது பெருமையாகுமா? இங்கு இதில் பெறுவது என்கொலோ - இங்கு இவ்வாறு செய்வதில் அவன் அடையக் கூடிய பயன் யாதோ? அருமையின் நின்று - அடைதற்கரிய பொருளாய் நின்று; உயிர் அளிக்கும் - உலக உயிர்களைப் பாதுகாக்கும்; ஆறுடைத் தருமமே - நெறியுடைய தருமமே; தன்னைத் தான் தவிர்க்குமோ - தன்னைத்தானே அழித்துக் கொள்ளுமோ? இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாத செயலை இராமன் செய்யமாட்டான் என்பது வாலியின் கருத்தாகும். இராமன் தருமமே உருவெடுத்து வந்தவனாதலின், தருமத்திற்கு மாறான செயல்களைச் செய்ய மாட்டான் என்பதால் 'தருமமே தவிர்க்குமோ தன்னைத்தான்' என்றான். 'அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்' (1349) 'மெய்யற மூர்த்தி வில்லோன்' (5882) என்பன காண்க. தவிர்க்குமோ - ஓகாரம் எதிர்மறைப்பொருள். இது பெருமையோ - பெருமையைத் தருவதாகுமோ என்றது பழியையே தரும் என்பதைக் குறிப்பால் உணர்ந்தும். தருமமே - ஏகாரம் சிறப்பு; முன்பாடலில் இராமனை 'அறத்தின் ஆறெலாம் இழைத்தவன்' எனக் கூறிய வாலி இப்பாடலில் 'தருமமே' எனக் குறிப்பிடுகிறான். 32 |