3967. | 'ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள் மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப் போற்றலை; இன்னன புகறல்பாலையோ?' |
ஏற்றபேர் உலகு எலாம்- தன் தந்தை ஏற்று ஆண்டு வந்த பெரிய உலகின் ஆட்சி முழுவதையும்; எய்தி - (அவன் அளிக்க) தனக்கு உரிமையாகப் பெற்று; ஈன்றவள் மாற்றவள் ஏவ - தன் தாய்க்கு மாற்றாள் ஆகிய கைகேயி கட்டளையிட; அவள்தன் மைந்தனுக்கு - அவளது மகனான பரதனுக்கு; ஆற்ற அரும் உவகையால் - தாங்குதற்கரிய மகிழ்ச்சியோடு; அளித்த ஐயனை - (நாட்டாட்சியை) அளித்த பெரியோனாகிய இராமனை; போற்றலை - புகழ்ந்து பாராட்டாமல்; இன்னன - இத்தகைய பழிமொழிகளை; புகறல் பாலையோ - கூறத்தகுவையோ? மூத்த மைந்தன் என்ற உரிமையால் நாடு பெற்றதால் 'எய்தி' என்றான். கைகேயியின் கொடுமை காரணமாக அவள் பெயரைக் கூற விரும்பாத வாலி 'மாற்றவள்' எனக் குறிப்பிடுகிறான். ஈன்றவள் - கோசலை; மாற்றவள்தன் மைந்தன் - கைகேயியின் மகன் பரதன். ஆற்றரும் உவகையால் அளித்தது - 'பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?' (1604) என்ற இராமன் கூற்றாலும் ''இப்பொழுது எம்மனோரால்'' 'தெருளுடை மனத்து மன்னன்' (1602, 1603) எனத் தொடங்கும் பாடல்களாலும் அறியலாம். 'பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி' என்றார் குலசேகரர். (பெருமாள்திருமொழி-8-5) 33 |