3970. | 'இருத்தி, நீ, இறை, இவண்; இமைப்பு இல் காலையில், உருத்தவன் உயிர் குடித்து, உடன் வந்தாரையும் கருத்து அழித்து, எய்துவென்; கலங்கல்' என்றனன்; விரைக் குழல், பின், உரை விளம்ப அஞ்சினாள். |
நீ இறை இவண் இருத்தி - 'நீ சிறிது பொழுது இங்கே இருப்பாயாக; இமைப்பு இல் காலையில் - கண்ணிமைக்கும் பொழுதும் இல்லாத நேரத்திற்குள்; உருத்தவன் உயிர்குடித்து - என்மீது வெகுண்டு வந்த சுக்கிரீவனின் உயிரைப்பருகி; உடன் வந்தாரையும் - அவனுடன் வந்தவர்களையும்; கருத்து அழித்து - (அவர்கள்) எண்ணம் நிறைவேறாதவாறு அழித்து; எய்துவென்- மீண்டு வருவேன். கலங்கல் என்றனன்- நீ கலங்க வேண்டா' என்று (தாரைக்கு வாலி) ஆறுதல் கூறினான். விரைக்குழல் - வாசனைமிக்க கூந்தலை உடையவளான தாரை; பின்- அதற்குப் பிறகு; உரை விளம்ப அஞ்சினாள் - (வாலியின் கருத்திற்கு மாறாகப்) பேச அஞ்சினாள். இறை - மிகச் சிறியது. 'இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி' (4073) என்னும் இடம் காண்க. தாரை, இராமலக்குவர் சுக்கிரீவனுக்குத் துணையாக வந்துள்ளனர் என்றபோதும், அவர்கள் துணையாக வரமாட்டார்கள் என்றும், அங்ஙனமே வரினும் அவர்கள் உடன்பிறந்தார் சண்டையில் தலையிட மாட்டார்கள் என்றும் வாலி நம்பியதால் துணைவந்தவர் வேறு யாவராகவேனும் இருக்கலாம் என்ற எண்ணத்துடன் 'கருத்து அழித்து எய்துவென்' என்றான். அல்லது இராமலக்குவரே வரினும் அவர்கள் கருத்தை அழிக்க முடியும் என்ற உறுதியுடன் 'உடன் வந்தாரையும் கருத்தழித்து எய்துவென்' என்று பேசியிருக்கலாம். விரைக்குழல் - தாரையைக் குறித்தது. அன்மொழித்தொகை. 36 |