போரை விரும்பிய வாலி குன்றின் புறத்தே வருதல் கலித்துறை 3971. | ஒல்லை, செரு வேட்டு, உயர் வன் புய ஓங்கல் உம்பர் எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும், மல்லல் கிரியின்தலை வந்தனன், வாலி - கீழ்பால், தொல்லைக் கிரியின்தலை தோற்றிய ஞாயிறு என்ன. |
வாலி - (இவ்வாறு தாரைக்கு ஆறுதல் கூறிய) வாலி; ஒல்லை - விரைவில்; செருவேட்டு- போரை விரும்பி; உயர் - (அப்போர் விருப்பத்தால்) உயர்ந்து; உம்பர் எல்லைக்கும் அப்பால்- தேவர் உலகின் எல்லைக்கு அப்பாலும்; இவர்கின்ற - கிளர்ந்து ஓங்கிய; வன்புய ஓங்கல் இரண்டினோடும் - வலிய தோள்களாகிய மலைகள் இரண்டினோடு; கீழ்பால் - கிழக்குத் திசையில்; தொல்லைக் கிரியின்தலை - பழமையான உதயகிரி என்னும் மலையின் உச்சியில்; தோற்றிய ஞாயிறு என்ன - தோன்றிய சூரியனைப் போல; மல்லல் கிரியின்தலை - வளம் பொருந்திய அந்த மலையின் மேல்; வந்தனன் - வந்து தோன்றினான். வீரர்களுக்குப் போர் என்று கேட்டதும் தோள்கள் பூரித்து விளங்குமாதலின் 'செருவேட்டு உயர் வல்புயம்' என்றார். 'போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங்கொள் திண்தோள்' (907) என்றதும் காண்க. ஒல்லை - இடைச்சொல்; தோள்களாகிய இரண்டு மலைகளுடன் ஒரு மலையின் தலையில் உதயகிரியின் தலை தோன்றும் சூரியன் போலத் தோன்றினான் என நயம்படக் கூறியுள்ளமை காண்க. வாலிக்குச் சூரியன் உவமை. புய ஓங்கல் - தோளாகிய மலை, உருவகம். நாளும் தோன்றும் பழமையுடைய மலையாதலின் 'தொல்லைக் கிரி' எனப்பட்டது. பல வளங்கள் கொண்டதாதலின் வாலிக்குரிய மலை 'மல்லல் கிரி' எனப்பட்டது. சூரியன் மைந்தன் எதிரே சூரியன் போல் வாலி தோன்றினான் என்ற முரண் நயம் நோக்கத்தக்கது. 37 |