வாலியையும் சுக்கிரீவனையும் வியந்து நோக்கிய இராமன் தம்பியிடம் கூறல் 3974. | அவ் வேலை, இராமனும், அன்புடைத் தம்பிக்கு, 'ஐய! செவ்வே செல நோக்குதி; தானவர் தேவர் நிற்க, எவ் வேலை, எம் மேகம், எக் காலொடு எக் கால வெந் தீ, வெவ் வேறு உலகத்து இவர் மேனியை மானும்?' என்றான். |
அவ்வேலை - அப்பொழுது; இராமனும் - இராமபிரானும்; அன்புடைத் தம்பிக்கு - அன்பு நிறைந்த தம்பியான இலக்குவனிடம்; ஐய - 'ஐயனே! செவ்வே செல நோக்குதி - நன்றாகக் கூர்ந்து நோக்குவாய்; தானவர் தேவர் நிற்க - அசுரர்களும் தேவர்களும் ஒரு புறம் நிற்கட்டும்; எவ்வேலை - எந்தக் கடல்; எம் மேகம் - எந்த மேகம்; எக் காலொடு - எந்தக் காற்றொடு; எக்கால வெந்தீ - எந்தக் கொடிய காலாக்கினி; வெவ்வேறு உலகத்து - வெவ்வேறு வகைப்பட்ட பல உலகங்களிடை; இவர் மேனியை - இந்த வாலி, சுக்கிரீவர் உடல்களுக்கு; மானும் என்றான் - ஒப்பாகும்?' என்று கூறினான். எந்த உலகிலும் உள்ளதான கடலும் மேகமும், காற்றும், காலாக்கினியும் வாலி சுக்கிரீவர் உடல்களுக்கு (வலிமையால்) நிகராகா என்பானாய் 'எவ்வேலை, எம்மேகம், எக்காலொடு, எக்கால வெந்தீ வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும்?' என்றான். ஆற்றல் மிக்க அவர்களுக்கு நிகராக அசுரர், தேவர்களைக் கூறமுடியாது ஆதலின் 'தானவர், தேவர் நிற்க' என அவ்விரு திறத்தாரையும் விலக்கிக் கூறினான். தம்பியை 'ஐய' என்றது அன்புபற்றி வந்த மரபு வழுவமைதி. தானவர் - தனு என்பாளுக்குக் காசிபர் மூலம் பிறந்த அசுரர்களாவர். தம்பிக்கு - வேற்றுமை மயக்கம்; காலொடு - ஓடு எண்ணுப் பொருளில்வந்தது. 40 |