இலக்குவன் சுக்கிரீவனை ஐயுற்றது

3975.வள்ளற்கு, இளையான் பகர்வான்,
     'இவன், தம்முன் வாழ்நாள்
கொள்ள, கொடுங் கூற்றுவனைக்
      கொணர்ந்தான்
; குரங்கின்
எள்ளற்குறு போர் செய
      எண்ணினன் என்னும் இன்னல்
உள்ளத்தின் ஊன்ற,உணர்வு
     உற்றிலென் ஒன்றும், என்றான்.

     வள்ளற்கு இனையான் - வள்ளலாகிய இராமனுக்கு இளையவனாகிய
இலக்குவன்; பகர்வான் - மறுமொழி கூறுவானாய்; இவன் - 'இந்தச்
சுக்கிரீவன்; தம்முன் - தன் தமையனுடைய; வாழ் நாள் கொள்ள -
ஆயுளைப் பறித்துக் கொள்வதற்காக; கொடுங்கூற்றுவனைக் கொணர்ந்தான்
-
கொடிய யமனை இங்கு அழைத்து வந்துள்ளான்; குரங்கின்
எள்ளற்குறுபோர் -
குரங்கினது பலரும் இகழ்தற்குரிய போர்த்தொழிலை;
செய எண்ணினன் -
செய்வதற்கு எண்ணினான்; என்னும் இன்னல் -
என்பதனால் ஏற்பட்ட துன்பம்; உள்ளத்தின் ஊன்ற - மனத்தில் ஆழ்ந்து
பதிய; ஒன்றும் உணர்வு உற்றிலென் - ஒன்றையும் உணரும் உணர்வின்றி
உள்ளேன்.  என்றான் - என்ற உரைத்தான்.

     தனக்குரிய நாட்டைத் தன் தம்பி பரதனுக்கு உவந்து அளித்த வண்மை
நோக்கி இராமனை 'வள்ளல்' எனக் குறித்தார்.  இராமனைப் பிரியாது
தொண்டு செய்து வரும் தம்பி இலக்குவன், சுக்கிரீவன் தன் தமையனைக்
கொல்லவே இராமனைத் துணையாக அழைத்து வந்துள்ளான் என்று எண்ணிக்
கலங்கினான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.  இராமனை அழைத்து
வந்தது கூற்றுவனையே அழைத்து வந்து செயலாய் அமைந்தது என்பதால்
'இவன் தம்முன் வாழ்நாள் கொள்ள கொடுங்கூற்றுவனைக் கொணர்ந்தான்'
என்றான்.  'வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்'
(3787) என நட்புக்கோட் படலத்தில் அனுமன் இராமனை வாலிக்குக்
கூற்றுவனாகக் குறித்ததை நினைக.  'வாலிகாலன்' (3885) எனவும் முன்பு
வந்தது. சுக்கிரீவன் மேற்கொண்டுள்ள போர் பலரும் இகழும்படியான குரங்குப்
போராய் அமைந்துவிட்டதே என்பதால் 'குரங்கின் எள்ளற்க உறுபோர் செய
எண்ணினன்' என்றான்.  தமையனைக் கொல்லும் இத்தீய செயலுக்குத் தன்
தமையனாகிய இராமனது துணையை நாடியுள்ளானே என நினைகையில்
கலக்கமுற்றதால் 'என்னும் இன்னல் உள்ளத்தின் ஊன்ற உணர்வுற்றிலென்
ஒன்றும்' என்றான்.  'இப்படியும் ஒரு தம்பியா' என்ற நினைப்பிலே
கலங்கினான்.  இலட்சித்தம்பி.  இலக்குவனது சகோதரப் பாசத்தின்
மேம்பாட்டையும், அவன் சுக்கிரீவனைக் குறைத்து மதிப்பிடுவதையும், தாம்
குரங்கோடு போர் செய்ய வந்த புன்மை குறித்து அவன் வருந்துவதையும்
தெளிவாகப் பாடலில் காண முடிகிறது.  கூற்றுவன் - உவமை ஆகுபெயர்.  41